12 ஆம் வகுப்பிற்கான என்.சி.இ.ஆர்.டி அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், அயோத்தி விவகாரம் தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பழைய புத்தகத்தில் அயோத்தி விவகாரம் 4 பக்கங்களுக்கு இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அது 2 பக்கங்களுக்கு சுருக்கப்பபட்டுள்ளது.
பாஜகவின் ரத யாத்திரை, மசூதி இடிப்பில் கர சேவகர்களின் பங்கு, மசூதி இடிப்பை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை, பாஜக ஆண்ட மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அயோத்தி விவகாரத்தில் பாஜக வருத்தம் தெரிவித்தது உள்ளிட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. பாபர் மசூதி என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அது 3 குவிமாடங்களை கொண்ட கட்டமைப்பு என கூறப்பட்டுள்ளது. அந்த கட்டமைப்பு ராம ஜென்ம பூமியில் கட்டப்பட்டதாகவும், அதன் உள்புறமும், வெளிப்புறமும் இந்து மத சின்னங்கள் கண்களுக்கு தெரியும் வகையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் பழைய புத்தகத்தில் பாபர் மசூதி இடிப்புக்கு மறுநாள் உள்ள செய்தி தாள் குறிப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில், அவை நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில், அப்போதைய உத்தரபிரதேச முதல்வர் கல்யாண் சிங் சட்டத்தின் மாட்சிமையை நிலை நிறுத்த தவறி, நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். பழைய புத்தகத்தில் அவை இடம்பெற்றிருந்த நிலையில், அப்பகுதி நீக்கப்பட்டு அயோத்தி விவகாரத்தில் இறுதி தீர்ப்பின் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூகத்தில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டதாகவும் புதிய புத்தகத்தில் கூறப்பட்பட்டுள்ளது. இந்த மாற்றம் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. இது கல்வியை காவிமயமாக்கும் முயற்சி எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இதனை என்.சி.இ.ஆர்.டி இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி, திட்டவட்டமாக மறுத்துள்ளார். பள்ளி பாடப்புத்தகங்களில் கலவரம் பற்றி ஏன் கற்பிக்க வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ள அவர், நேர்மறையான குடிமக்களை தாங்கள் உருவாக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, நமது மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறும் வகையிலும், சமூகத்தில் வெறுப்பை உண்டாக்கும் வகையிலும் அல்லது வெறுப்புக்கு ஆளாகும் வகையிலும் நாம் கற்பிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள அவர், அதுதான் கல்வியின் நோக்கமா? எனவும் வினவியுள்ளார்.
என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதை வளர்ந்த பின்னர், அவர்கள் புரிந்துகொள்ளட்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மழை விட்டாலும் துவானம் விடவில்லை என்பதுபோல், ராமர் கோயில் கட்டப்பட்டு அயோத்தி விவகாரம் முடிவுக்கு வந்தாலும், அது தொடர்பான சர்ச்சைகள் தீர்ந்தபாடில்லை.