கடந்த 2012-இல் இதே நாளில் இந்திய தலைநகரம் டெல்லியில் அந்த கொடூர சம்பவம் நடந்தது. அன்றைய தினம் இரவு நடைபெற்ற அந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஓடும் பேருந்தில் 23 வயதான பாராமெடிக்கல் பயிற்சி பெற்று வந்த மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். சுமார் 13 நாட்கள் உயிருக்காக போராடி உயிரிழந்தார் பாதிக்கப்பட்ட பெண்.
இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது ஒருவர் உயிரிழந்தார். மற்ற ஐவரில் ஒருவர் சிறார் குற்றவாளி என்பதால் அவரை தவிர்த்து மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. கடந்த 2020 மார்ச், 20 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த சம்பவம் நடைபெற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, ‘மிர்ரர் நவ்’ செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார்.
“நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க போதுமான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. நீதி வேண்டி பாதிக்கப்பட்ட பெண்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பினும் அந்த நீதியை பெற நீண்ட நாட்கள் நேரம் எடுக்கிறது. எனது மகளுக்கு நேர்ந்த வன்மத்தை தொடர்ந்து இனி நம் நாட்டில் எல்லாம் மாறும் என எண்ணி இருந்தேன். ஆனால் இங்கு ஒன்றும் மாறவில்லை. அதற்கு வேண்டிய வேலைகளை அரசு செய்யவில்லை.
இத்தகைய சூழலில் இன்றைய கொரோனா பெருந்தொற்று காரணமாக குற்றவாளிகள் விடுதலையாகி வெளியே வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.