நாரி சக்தி வந்தன் அதினியம் கூகுள்
இந்தியா

மக்களவையில் சரியும் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை

சண்முகப் பிரியா . செ

நாரி சக்தி வந்தன் அதினியம்

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் உள்ள மொத்த இடங்களில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வழிவகுக்கும் மகளிா் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று மக்களவையிலும் செப்டம்பர் 21 மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, ’நாரி சக்தி வந்தன் அதினியம்’ சட்டமானது. எனினும் இன்னும் இச்சட்டம் அமலுக்கு வரவில்லை.

இந்த நிலையில், 2024, 18-வது மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 8,337 வேட்பாளர்களில் 797 பேர் பெண்களாக இருந்தனர். பா.ஜ.க. சாா்பில் 69 பெண்கள் போட்டியிட்டனா். அதில் 30 போ் வெற்றி பெற்றனா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட 41 பெண்களில் 14 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் சாா்பில் 11 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சமாஜவாடி கட்சி சாா்பில் 4 பெண் வேட்பாளர்களும், தி.மு.க. சாா்பில் 3 பெண் வேட்பாளர்களும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 2 பெண் வேட்பாளர்களும் அதேபோல லோக் ஜனசக்தி கட்சி சாா்பில் போட்டியிட்ட 2 பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது வெற்றி பெற்றுள்ள 73 எம்.பி.க்களில் இளம் வயதினராக சமாஜ்வாதியின் பிரியா சரோஜ் (25), இக்ரா சவுத்ரி (29) உள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 2019 தேர்தலுக்குப் பிறகு 11 பெண் எம்.பி.க்கள் இருந்தனர். ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் அந்த எண்ணிக்கை 8 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 78 பெண்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சற்று சரிந்துள்ளது.

இம்முறை தோ்ந்தெடுக்கப்பட்ட மொத்த எம்.பி.க்களில் பெண் எம்.பி.க்களின் விகிதம் 13.44 சதவீதத்துக்கும் மேலாகும். 2009 மக்களவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 7% ஆகவும், 2014-ல் 8% ஆகவும் இருந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட இந்தியாவில் உள்ள மொத்த கட்சிகளிலும், தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சி மட்டுமே பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட சம வாய்ப்பு அளித்திருந்தது. இதன் 40 வேட்பாளர்களில் 20 வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.