இந்தியா

பெண் நீதிபதிகள்.... கவலைக்குரிய எண்ணிக்கை...

Rasus

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள இந்திரா பானர்ஜியோடு சேர்த்து தற்போது நாட்டின் நான்கு முக்கிய உயர் நீதிமன்றங்களுக்கு பெண்கள் தலைமை வகிக்கிறார்கள்.

நீதிபதி ரோஹினி டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், மஞ்சுளா செல்லூர் மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், நிஷிதா நிர்மல் மகாத்ரே கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் (பொறுப்பு), இந்திரா பானர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றுகின்றனர். நான்கு பெண்கள் ஒரே நேரத்தில் உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை வகிப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை.

இருப்பினும் இந்தியாவின் நீதிபதிகள் எண்ணிக்கையில் பெண்களின் விகிதம் மிகக் குறைவுதான். உச்ச நீதிமன்றத்தில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருக்கிறார். நீதிபதி ஆர். பானுமதிதான் உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரே பெண் நீதிபதி. நாடு முழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் பதவி வகிக்கும் 652 நீதிபதிகளில், 69 பேர் மட்டுமே பெண்கள். அதிகபட்சமாக மும்பை உயர் நீதிமன்றத்தில் 12 பெண் நீதிபதிகளும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் 11 நீதிபதிகளும் உள்ளனர். இந்தியாவில் உள்ள 8 உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் இல்லை.