இந்தியா

பல் மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்த பெண் !

பல் மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்த பெண் !

jagadeesh

கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவருக்கு பல் மருத்துவரின் கிளினிக்கிலேயே பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். ஊரடங்கு அமலில் இருப்பதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கலில் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ்கள் கூட வருவதில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

பல பெண்கள் சாலைகளிலோ அல்லது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலோ குழந்தையை பிரசவிக்கின்றனர். இப்படிதான கர்நாடக மாநிலம் பெங்களூரில் வாகனங்கள் ஏதும் கிடைக்காததால் பிரசவ வலியோடு பெண் ஒருவர் தன் கணவருடன் மருத்துவமனையை நோக்கி 7 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளார். ஆனால், அவரால் மருத்துவமனையை அடைய முடியவில்லை. இதனையடுத்து அருகில் இருந்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பல் மருத்துவர் பிரசவம் பார்த்துள்ளார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பின்பு, தாயும் குழந்தையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பல் மருத்துவர் ரம்யா கூறும்போது "அந்தப் பெண் 5 முதல் 7 கிலோ மீட்டர் வரை நடந்து வந்திருப்பார். ஏதோ ஒரு மருத்துவமனை திறந்திருக்கும் என்ற நம்பிக்கையில் அவர் வந்துள்ளார். ஆனால் என்னுடைய பல் மருத்துவமனை அருகே வரும்போது அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்து. இதையடுத்து அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்தது. முதலில் குழந்தை அசைவற்று இருந்தது, நாங்கள் குழந்தை இறந்துவிட்டது என நினைத்தோம், ஆனால் பின்பு குழந்தை அசைந்தது. இப்போது குழந்தையும் தாயும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்" என்றார் அவர்.