இந்தியா

பெண் குழந்தை பெற்றெடுத்தது குற்றமா? மனைவியின் அந்தரங்க உறுப்பை தாக்கிய கொடூர கணவன்!

பெண் குழந்தை பெற்றெடுத்தது குற்றமா? மனைவியின் அந்தரங்க உறுப்பை தாக்கிய கொடூர கணவன்!

JananiGovindhan

பெண் குழந்தைகளை பெற்று கொடுத்ததற்காக கட்டிய மனைவியை கணவரும் அவரது பெற்றோரும் சேர்ந்து நடு ரோட்டில் வைத்து அடித்து தாக்கிய கொடூர நிகழ்வு உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது.

உத்தர பிரதேசத்தின் ஹமிர்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குஸ்மா என்ற பெண். இவருக்கும், நீரஜ் ப்ரஜாப்தி என்ற நபருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு ப்ரான்ஷி (7), ஆர்த்தி (2) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

முதல் குழந்தை பெண்ணாக பிறந்த போதே நீரஜும் அவரது பெற்றோரும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த குழந்தையும் பெண்ணாகவே இருந்ததால் குஸ்மா மீது நீரஜ் குடும்பத்தினர் தொடர்ந்து வன்முறையை கையாண்டிருக்கிறார்கள்.

ஆண் குழந்தை பெற்றுத் தராத ஆத்திரத்தில் குஸ்மாவின் அந்தரங்க உறுப்புகளை தாக்கியிருக்கிறார்கள் நீரஜ் குடும்பத்தினர். மேலும் குழந்தைகளுக்கு படிக்க வைக்கவும், அவர்களுக்கான செலவுக்கு பணம் கொடுப்பதையும் நீரஜ் நிறுத்தியிருக்கிறார்.

இதனால் குஸ்மாவே வேலைக்கு சென்று தனது பெண் குழந்தைகளை பாதுகாத்து வருகிறார். இப்படி இருக்கையில் கடந்த வியாழனன்று (ஜூன்2) நீரஜும் அவரது பெற்றோர், சகோதரர் என அனைவரும் குஸ்மாவை பொதுவெளியில் வைத்து கல்லால் தாக்கியும், குச்சியால் அடிக்கவும் செய்திருக்கிறார்கள். இதனால் நிலைக்குலைந்து போயிருக்கிறார் குஸ்மா.

நீரஜின் இந்த கொடூர செயல்களை அறிந்த குஸ்மாவின் தந்தை விரைந்து சென்று அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கிறார். இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்த கொட்வாலி போலிஸார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து மேற்குறிப்பிட்ட விவரங்களை பெற்றனர்.

இதனை தொடர்ந்து குஸ்மாவை தாக்கிய நீரஜ், அவரது பெற்றோர் உள்ளிட்ட ஐவர் மீது கொலை வெறி தாக்குதல் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உரிய நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என மஹோபா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதா சிங் கூறியுள்ளார்.

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகள், வன்முறைகள், வன்கொடுமைகள் போன்றவை நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இவற்றை தடுக்கவும், சீர் செய்யவும் அரசு தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் மக்களும் அதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.