இந்தியா

நாக்பூர்: பாலியல் வன்கொடுமை புகாருக்காக 800 கி.மீ பயணம் செய்த பெண்

webteam

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த 22 வயது நேபாளிப் பெண், பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு எதிராக புகார் அளிக்க மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையில் புகார் தெரிவிப்பது தொடர்பாக வன்கொடுமையில் ஈடுபட்ட நபர், அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார். புகார் தெரிவிப்பதற்காகவே லக்னோவில் இருந்து 800 கி.மீ. பயணம் செய்து நாக்பூர் சென்றடைந்துள்ளார். ஒரு நண்பரின் உதவியுடன் உள்ளூர் காவல்நிலையத்தில் ஸீரோ எப்ஐஆர் பதிவு செய்தார். எந்த காவல்நிலையத்திலும் ஸீரோ எப்ஐஆர் பதிவு செய்யலாம். பின்னர் அதை சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குள் மாற்றிக்கொள்ளமுடியும்.

கடந்த 2018ம் ஆண்டு அந்தப் பெண் வேலை தேடி நேபாளத்தில் இருந்து இந்தியா வந்தார் அந்தப் பெண். இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் லக்னோவில் உள்ள பைசாபாத் சாலையில் உள்ள வாடகை அறையில் தோழியுடன் இணைந்து தங்கியிருந்தார். அவருடைய தோழியின் மூலம் வீடியோ கால் வழியாக துபாயில் உள்ள பிரவீன் ராஜ்பால் யாதவ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

பாதிக்கப்பட்ட பெண், தன் தோழியுடன் சேர்ந்து ரூ. 1.5 லட்சம் வைத்திருந்தார். அவரது தோழி பணத்தைக் கேட்டிருக்கிறார். முன்பு வாங்கிய பணமே திரும்பக் கிடைக்காத காரணத்தால், அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த தோழி, அவரை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதுபற்றி நேபாளிப் பெண், துபாயில் உள்ள பிரவீனிடம் தெரிவித்துள்ளார். உடனே ஒரு ஹோட்டலில் அறையை பதிவு செய்து அங்கு செல்லக் கூறியுள்ளார்.

சில நாட்களில் துபாயில் இருந்து லக்னோ திரும்பிய பிரவீன், அந்த நேபாளிப் பெண்ணை ஹோட்டலில் சந்தித்துள்ளார். அவரை வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்து வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அப்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளையும் பிரவீன் எடுத்துள்ளார். பின்னர் நண்பரின் அறைக்கும் அழைத்துச் சென்று மீண்டும் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில் நேபாளிப் பெண் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தால் ஆபாசமான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று அந்தப் பெண்ணை பிரவீன் மிரட்டியதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.