இந்தியா

குழந்தை பிறக்காது எனக் கூறிய ஜோசியர்.. கணவன் துன்புறுத்தலால் மனைவி தற்கொலை?

குழந்தை பிறக்காது எனக் கூறிய ஜோசியர்.. கணவன் துன்புறுத்தலால் மனைவி தற்கொலை?

Sinekadhara

ஜோதிடரின் பேச்சை கேட்டு கணவரும், அவர் குடும்பத்தினரும் துன்புறுத்தியாதால் பெண் தற்கொலை செய்துகொண்டதாக பெண்ணின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெங்களூருவில் தாயார் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார் 25 வயதான அஸ்வினி. இவர் கடந்த ஆண்டு தனது தாயாரிடம் யுவராஜா என்பவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி அனுமதி வாங்கியுள்ளார். அதன்பேரில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் யுவராஜாவுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைகிடைத்தபிறகு, இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அஸ்வினியும் பெங்களூருவில் பிரபலமான ஆன்லைன் மளிகைக்கடை ஸ்டோரில் வாடிக்கையாளர் உதவித்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

திருமணமாகி சில நாட்களுக்கு பின்பு யுவராஜாவின் குடும்பத்தார் ஜோசியரை சந்தித்தபோது, அஸ்வினிக்கு குழந்தை பிறக்காது எனக் கூறியிருக்கிறார். அப்போதிலிருந்து அவர்கள் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த யுவராஜா, தனது மனைவியை குழந்தை பிறக்காது எனக் கூறி தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் அவர் பருமனாக இருந்ததையும், குறையாகக் கூறி யுவராஜாவின் குடும்பத்தினரும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அஸ்வினி நவம்பர் 14ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுபற்றி அஸ்வினியின் குடும்பத்தார் தி நியூஸ் மினிட் பத்திரிக்கைக்கு பேசியபோது, ‘’ஜோசியக்காரர் அஸ்வினிக்கு குழந்தைப் பிறக்காது எனக் கூறியதிலிருந்தே யுவராஜாவின் குடும்பத்தார் அவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். யுவராவிற்கு வேலை இல்லாததால் தனது தேவைக்காக முழுக்க முழுக்க அஸ்வினியையே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே குழந்தை பிறக்காது என்பதை காரணம் காட்டி, அதிக நகை, பணம் வரதட்சணையாகக் கொடுக்கவேண்டும் என்று அஸ்வினியை அடித்து துன்புறுத்துவதாக அஸ்வினி அடிக்கடிக் கூறுவாள்.

மேலும் நவம்பர் 16ஆம் தேதி யுவராஜின் பிறந்தநாள் வருவதாகவும், அவருக்கு செல்போன் மற்றும் பைக் கிஃப்டாக வேண்டும் என்று அவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதாக அஸ்வினி கூறினாள். மேலும் நவம்பர் 13ஆம் தேதி இது சண்டையாக மாறியதால் யுவராஜ் அடித்து கொடுமைப்படுத்துவதாக போன் செய்தாள். அடுத்த நாளே, மதியம் 12 மணியளவில் அஸ்வினியை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக யுவராஜாவின் குடும்பத்தாரிடம் போன் வந்தது.

ஆனால் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கும்போது அஸ்வினி இறந்துவிட்டதாகக் கூறினர். அவரது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினர். ஆனால் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருக்கிறது. இது கொலையா? தற்கொலையா என்று தெரியவில்லை. தற்கொலையாக இருந்தாலும், அதற்கு தூண்டியது யுவராஜா தான்’’ எனக் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து யுவராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஹென்னூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.