மகாராஷ்டிராவில் நடந்த கட்டட விபத்தில், 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்திலுள்ள கஜல்புரா பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டடம் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 13 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியானது தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கிறது.
கட்டடம் கட்டி 7 வருடங்களே ஆன நிலையில், கட்டடப்பணி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கித் தவித்த மெஹ்ருனிசா அப்துல் ஹமீத் காசி என்ற பெண் மணி கிட்டத்தட்ட 26 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினரால் மீட்கப்பட்டார்.
கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு சிறு துளையில் சிக்கிக்கொண்ட அவரை மீட்பு பணி வீரர்கள் கடுமையாக போராடி மீட்டனர். இதே போல நேற்றும் 19 மணி போராட்டத்திற்கு பிறகு 4 வயது சிறுவனை மீட்பு படையினர் மீட்டனர். இடர்பாடுகளில் சிக்கியிருந்த அவர் மண் மற்றும் தூசியால் முழுவதுமாக மூடப்பட்டிருந்தார். அவருக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் கொடுக்கப்பட்டு ஆம்புலன்ஸூக்கு கொண்டு செல்லப்பட்டார்.