ஹைதராபாத்தில் மோமோ உணவை உண்ட ஒரு பெண் உயிரிழந்தார். இதனால், மயோனைஸுக்கு தெலுங்கானா அரசு தடை விதித்துள்ளது.
15 பேர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோமோக்கள் அனைத்தும் ஒரே உணவு தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பல்வேறு உணவகங்களுக்கு விநியோகிக்கப்பட்டதும் இவற்றை வாங்கி உண்டவர்கள் பாதிக்கப்பட்டதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா பேகம் என்றும் மோமோவை உண்டவுடன் கடும் வயிற்று வலியும் அதைத்தொடர்ந்து வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது, மோமோவை உண்ட ரேஷ்மா பேகமின் இரு பிள்ளைகளும் உடல் நலம் பாதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோமோவை தயாரித்த பீகாரை சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதனையடுத்து, பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தெலங்கானா அரசு தடை விதித்துள்ளது. வணிக ரீதியில் பயன்படுத்தப்படும், பதப்படுத்தப்படாத மயோனைஸுக்கு அம்மாநில அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது.
வேகவைக்கப்படாத அல்லது பதப்படுத்தப்படாத முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்களால் உடல்நல பாதிப்பு ஏற்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதப்படுத்தப்பட்ட முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனஸைக்கு தடை விதிக்கப்படவில்லை.