ஆன்லைன் வேலை வாய்ப்பு கூகுள்
இந்தியா

ஆன்லைன் மூலம் ‘WFH’ வேலை.. 4 நாட்களில் 54 லட்சம் இழந்த பெண்! 'Maternity' விடுப்பில் நிகழ்ந்த சோகம்!

மும்பையில் ஃப்ரீலான்சர் முறையில் வீட்டிலிருந்தே வேலை என்ற விளம்பரத்தைப்பார்த்து, ஏமாந்து 4 நாட்களில் 54,30,000/= இழந்த பெண்.

Jayashree A

மும்பையில் ஃப்ரீலான்சர் முறையில் வீட்டிலிருந்தே வேலை என்ற விளம்பரத்தைப்பார்த்து, ஏமாந்து 4 நாட்களில் 54,30,000/இழந்த பெண்.

மும்பை நகரின் ஐரோலியை சேர்ந்த 37 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனது கர்ப்பகால விடுப்பின் போது, வருமானம் ஈட்ட நினைத்துள்ளார். அதற்காக வீட்டிலிருந்து வேலை செய்ய நினைத்து இருக்கிறார். அதன்படி ஆன்லைன் விளம்பரம் ஒன்றின் மூலம் ஃப்ரீலான்ஸர் முறைப்படி ப்ராஜெக்ட் ஒன்றை பெற்றுள்ளார். தான் ப்ராஜெக்ட் பெற்ற நிறுவனம் போலியானது என்று அப்பெண்ணிற்கு தெரியவில்லை.

இந்நிலையில், அப்போலி நிறுவனம் இவரைத் தொடர்புக்கொண்டு சில எளிமையான ப்ராஜெக்டை கொடுத்துள்ளது இதை முடித்துத் தந்தால், கணிசமான பணம் சம்பளமாக தருவதாகவும் கூறியுள்ளது.

அந்த பெண்ணும், இது உண்மை என்று நம்பி, கொடுத்த வேலையை செய்து முடிப்பதாகக்கூறி அவர்கள் கூறியபடி 5 டாஸ்க்குகளை நிறைவேற்றியுள்ளார். அதன்படி பல்வேறு அலுவலகங்கள் மற்றும் ஹோட்டல்களின் நிர்வாக திறமை, மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்து போன்றவற்றின் அடிப்படையைக்கொண்டு ரேட்டிங் கணித்து, தனக்கிட்ட வேலை மூன்று நாட்களில் முடித்துள்ளார். அவர்கள் சொன்ன பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணம் அனுப்பியுள்ளார். திருப்பி பெரிய தொகை கிடைக்கும் என அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பி பணத்தை அனுப்பிக் கொண்டே இருந்துள்ளார்.

பிறகு அந்நிறுவனத்தை தொடர்புக்கொண்டு, தனக்கு வரவேண்டிய, மற்றும் தான் செலவு செய்த மொத்த தொகையாக ரூபாய் 54,30,000/= கேட்டபொழுது, இரு நாட்களில் பணத்தை தருவதாக கூறிய அந்நிறுவனம் அதன் பிறகு அப்பெண்ணை தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் தனக்கு வரவேண்டிய தொகையை பெறுவதற்காக அப்பெண் அந்நிறுவனத்தை மீண்டும் தொடர்புக்கொள்ள முயன்றபொழுது, அந்நிறுவனம் இணைப்பில் இல்லை.

ஆன்லைன் வழியாக மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள நினைத்த சமயம் தளத்திலிருந்து அந்த வெப்சைட்டும் நீக்கப்பட்டிருந்தது. அதன் பிறகே அப்பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார். அதன்பிறகு மும்பையில் போலிசாரிடம்அந்நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். இப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் மும்பை சைபர் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள். இதுபோன்று நடப்பது முதல் முறை அல்ல. இதேபோல் பல புகார்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.

எச்சரிக்கை

வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் வேலை செய்ய விரும்புபவர்கள் சம்பந்தபட்ட நிறுவனம் நம்பகத்தன்மையானதா? என்றும் இது தனிநபர் நிறுவனமா அல்லது பொது நிறுவனமா என்பதையும் தெரிந்துக்கொள்வது அவசியம். அதே போல் வாட்ஸாப், ட்விட்டர் தளங்களில் வரும் விளம்பரங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இவை பெரும்பாலும் போலியானது. அதுபோல, தனது தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்கவோ அல்லது பதிவு செய்யவோ வேண்டாம்.