டெல்லியில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த இளம்பெண் ஒருவர் உயிர்தப்பிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதெல்லா கிராமம் அருகே உள்ள விகாஸ்புரியை சேர்ந்தவர் சப்னா. இவர் தனது நண்பர்களான குணால் மற்றும் ஜியாவுடன் பாசிம்விகாரில் இருந்து ஜானக்புரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த இருசக்கர வாகனத்தை குணால் ஓட்டி வந்துள்ளார். குணாலை அடுத்து ஜியாவும் அவரையடுத்து சப்னாவும் வாகனத்தில் அமர்ந்து சென்றுள்ளனர்.
இவர்கள் விகாஸ்புரி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த மற்றொரு இருசக்கரவாகனம் குணாலின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு சென்றது. இதில் நிலை தடுமாறிய குணால் மேம்பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோதியதில் அனைவரும் கீழே விழுந்துள்ளனர். ஆனால் இதை சற்றும் எதிர்பாராத சப்னா கடைசியாக அமர்ந்திருந்ததால் மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டார்.
சப்னா மேம்பாலத்திலிருந்து கீழே விழும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், முதலில் சப்னா அணிந்திருந்த ஹெல்மெட் கீழே விழுகிறது. பின்னர், அதைத்தொடர்ந்து சப்னாவும் கீழே விழுந்து மயக்கமடைகிறார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த சப்னாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சப்னாவுக்கும் மற்ற இரண்டு பேருக்கும் லேசான காயமே ஏற்பட்டது எனவும் அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார்கள் எனவும் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.