இந்தியா

பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கராத்தே கற்று வெளுத்து வாங்கிய தைரியப் பெண்!

பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கராத்தே கற்று வெளுத்து வாங்கிய தைரியப் பெண்!

Sinekadhara

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் பிரமீளா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 10 வயதாக இருக்கும்போது தனது தந்தையை இழந்துவிட்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை கைவிடவேண்டிய சூழ்நிலை. வீட்டு வறுமை மற்றும் தன் தம்பியின் படிப்பைக் கருத்தில்கொண்டு 2016ஆம் ஆண்டு சமையல்வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு கடை உரிமையாளரின் 19 வயது மகன் பிரமீளாவை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறான்.

18 வயதிற்கு முன்பே இந்த பெண் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். இந்த நிலை, மீண்டும் மீண்டும் தொடரவே 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போலீஸில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இதனால், அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், உள்ளூர் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டு பிரமீளாவின் குடும்பத்தை ஒதுக்கி வைத்திருக்கின்றனர். மேலும் ஜனவரி 2019ஆம் ஆண்டு அந்த நபரையே திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர்.

ஊரார் கட்டளைக்கு இணங்க திருமணமும் நடந்திருக்கிறது. ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு நடக்கும் கொடுமைக்கு முடிவு வரவில்லை. தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியபோது தான் மைனர் இல்லை என போலீஸாரிடம் கூறுமாறு வற்புறுத்திக் கொடுமை செய்ததாக இந்துஸ்தான் டைம்ஸ்க்கு கொடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அந்த பெண் கர்ப்பம் தரித்தபோது, கட்டாயப்படுத்தி கருக்கலைக்கும் மாத்திரைகளையும் கொடுத்திருக்கின்றனர். 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர்களை எதிர்த்துப் போராட முடிவு செய்திருக்கிறார் பிரமீளா. எனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை விடுதியில் சென்று சேர்ந்திருக்கிறார்.

இந்தூரைச் சேர்ந்த ஒரு அறக்கட்டளை பிரமீளாவுக்கு கராத்தே கற்றுத்தர முன்வந்திருக்கிறது. கராத்தே கற்றுக்கொண்ட பிறகு தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று ஆண்களை எதிர்த்து சண்டையிட்டிருக்கிறார். இதனால் அளவில்லாத தன்னம்பிக்கை தனக்குள் பிறந்துவிட்டதாகவும், மேலும், அடுத்தடுத்த நிலைக்குச் சென்று கராத்தே கற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுபற்றி பிரமீளாவின் கராத்தே பயிற்சியாளர் சயித் அலாம் கூறுகையில், அவர்மீது இரக்கப்படுவதற்கு பதிலாக அவரை மனதளவில் தைரியமிக்கவராக மாற்றிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.