இந்தியா

சம்பள பிரச்னையில் பெண்ணை தாக்கிய உரிமையாளர் - வீடியோ

சம்பள பிரச்னையில் பெண்ணை தாக்கிய உரிமையாளர் - வீடியோ

rajakannan

டெல்லியில் சம்பள பிரச்னையால் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் அவரது உதவியாளர்களுடன் சேர்ந்து பெண் ஊழியரை, கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நொய்டாவில் உள்ள பெரிய சலூன் ஒன்றில் 25 வயதுடைய அந்த பெண் வேலை செய்து வந்துள்ளார். இதுகுறித்த வீடியோவில், நான்கு பேர் அந்த பெண்ணை தடியால் அடித்து தாக்குகின்றனர். அவரது தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் செல்கின்றனர். இதனை, சாலையில் சென்றவர்கள் சிலர் வேடிக்கை பார்த்தும் சிலர் அதனை வீடியோ எடுத்தும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், வீடியோ வைரலான பின்புதான் பிரச்னை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “அந்த சலூனில் கடந்த சில மாதங்களாக தான் மேக் அப் ஊழியராக ரூ17 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வந்தேன். கடந்த மாதத்திற்கான சம்பளத்தை சமீபத்தில் உரிமையாளரிடம் கேட்டேன். ஆனால், அவர் தாமதப்படுத்தி வந்தார். சில தினங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும் என்பதுபோல் அவரது எதிர்பார்ப்பு இருந்தது. அவரும், அவரது நண்பர்களும் அவர்களது ஆசைக்கு என்னை இணங்க கட்டாயப்படுத்தினர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் தம்முடைய புகாரில் தெரிவித்திருந்தார். பெண் தாக்கப்பட்டது தொடர்பாக முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக தெரிவித்த போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளனர்.