மாறிப்போன உணவு டெலிவரி.. அபராதம் கேட்ட பெண் புதிய தலைமுறை
இந்தியா

அகமதாபாத் | பன்னீர் டிக்கா சாண்ட்விச்-க்கு 50 லட்சம் அபராதமா? என்ன கொடுமை சார் இது!

ஜெனிட்டா ரோஸ்லின்

அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியில் வசித்து வருகிறார் நீராலி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவிற்காக, உணவு ஆர்டர் செய்யும் செயலி ஒன்றின் மூலம் “Pick Up Meals By Yerra” என்ற உணவகத்தில் பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை ஆர்டர் செய்துள்ளார்.

பிறகு, அந்த சாண்ட்விச்சின் ஒரு சில துண்டுகளை சாப்பிட்ட போது அது பன்னீரை போல இல்லை என்று அவருக்கு தெரியவந்துள்ளது. பின் தனக்கு வந்தது சிக்கன் சாண்ட்விச் என்பதை நீராலி அறிந்து கொண்டிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த நீராலி, சனிக்கிழமை அன்று அகமதாபாத் மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார். மேலும், தனக்கு இழப்பீடாக அந்நிறுவனம் 50 லட்சம் வழங்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள நீராலி, “நான் ஒரு சைவ பிரியர். எனது மதம் மற்றும் தனிப்பட்ட ஆரோக்கியம் காரணமாக அசைவ உணவை உண்பதில்லை.

இந்நிலையில், நான் ஆர்டர் செய்த பன்னீர் டிக்கா சாண்விட்ச்-க்கு பதிலாக உணவகத்தினர் சிக்கன் டிக்கா சாண்விட்ச்சை கொடுத்துள்ளனர். இது என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. இதனால், நான் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டேன். அதேநேரம், எனக்கு நடந்த இந்த சம்பவத்திற்கு இந்த தொகை போதுமானதே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதனை விசாரித்த சுகாதாரத்துறை இந்த உணவை அணுப்பிய உணகத்தின் நிறுவனமான VRYLY வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “இந்த தவறுக்காக நீராலிக்கு ரூ.5000 அபராதம் வழங்க வேண்டும் . இதனை மீண்டும் தொடர்ந்தால், விற்பனை நிலையத்திற்கே சீல் வைக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.