எய்ட்ஸ் இருப்பதாக தனியார் மருத்தவமனை தவறுதலாக கூறிய நிலையில் அதிர்ச்சிக்குள்ளான பெண் உயிரிழந்தார்.
சிம்லாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக சந்தேகித்தார். உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு சென்ற அவர் பரிசோதனை செய்து கொண்டார். அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் சோதனை முடிவின்படி எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட அந்தப்பெண் அதிர்ச்சியடைந்தார். மனமுடைந்த நிலையில் அதிக அதிர்ச்சியால் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அதிக அதிர்ச்சியிலேயே கோமா நிலையில் இருந்த அந்தப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் அவரது எய்ட்ஸ் தொடர்பான சோதனை முடிவுகள் அரசு மருத்துவமனையில் மறுபடியும் பரிசீலனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு எய்ட்ஸ் இல்லை என்றும், தனியார் மருத்துவமனை தவறான தகவலை கூறியதாகவும் தெரிவித்துள்ளது.
நோய் இல்லாத பெண் ஒருவருக்கு நோய் இருப்பதாகக் கூறியதால் ஓர் உயிர் பலியான சம்பவம் சிம்லாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம்,அம்மாநில சட்டப்பேரவையில் எதிரொலித்தது. சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் எம்எல்ஏ ரோஹ்ரு வலியுறுத்தினார்.
கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை மருத்துவமனை நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இமாச்சல பிரதேச முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.