இந்தியா

”ஒரு சின்ன ஸ்மைல்தான்.. அது போதுமே” - பெங்களூரு ஏர்போர்ட் பெண் ஊழியரால் பயணிகள் நெகிழ்ச்சி

JananiGovindhan

விமான பயணிகள் பலருக்கும் அண்மைக் காலமாக விமானங்களில் நடைபெறும் சம்பவங்கள் பெரும் கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கும். அதே வேளையில் எல்லா நேரத்திலும் இதுப்போன்ற அசவுகரியமான செயல்கள் நடக்காது என்பதற்கு பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த நிகழ்வை பற்றி நெட்டிசன்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

ஏனெனில், எத்தனை முறை விமானத்தில் பயணித்திருந்தாலும் ஒவ்வொரு முறை செல்லும் போதும் ஏதேனும் தடைகளோ குளறுபடிகளோ, விமானம் ரத்தாவது போன்ற பல நிகழ்வுகள் நிகழ்வது வாடிக்கையே. ஆனால் அந்த மாதிரியான டென்ஷனான நேரத்தில் உடன் பயணிக்கும் பயணிகளாலோ அல்லது விமான ஊழியர்களாலோ கிடைக்கும் சில நல்ல சைகைகள் காலத்துக்கும் நினைவில் இருக்கும்.

அதன்படி, பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறையின் வெளியே பெண் ஊழியர் ஒருவர், கழிவறையை பயன்படுத்திவிட்டு வரும் பெண்கள் அனைவருக்கும் Happy Journey எனக் கூறி புன்னகையோடு வழியனுப்பி வைப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என அமாண்டா என்பவர் பதிவிட்டதோடு, அந்த பெண் ஊழியரின் வாழ்த்தால் என்னுடைய பயணங்கள் உண்மையிலேயே எப்போதும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அமாண்டாவின் இந்த பதிவு ட்விட்டரில் பல இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, பெங்களூரு விமான நிலையத்தில் இதேப்போன்று தங்களுக்கு நடந்த நிகழ்வுகளின் நினைவலைகளையும் பகிர்ந்திருக்கிறார்கள். அதில், பலரும் கழிவறை அருகே இருந்த பெண் ஊழியரின் வாழ்த்து பல நேரங்களின் எங்களது பயண அசவுகரியங்களை சமாளிப்பதற்கான உந்துதலாக இருந்தது என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள்.

சில ஆண்களும் பெண் ஊழியரின் பணியை பாராட்டியதோடு பெங்களூரு விமான நிலையத்தின் இந்த முன்னெடுப்புக்கு வரவேற்பும் அளித்திருக்கிறார்கள். இதனையடுத்து பெங்களூருவின் கெம்ப்பேகவுடா விமான நிலைய நிர்வாகம், “பயணிகளின் பயணத்தை மேலும் மறக்கமுடியாத தருணமாக மாற்றுவதற்கான எங்கள் முயற்சி உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று அமாண்டாவின் அதே ட்விட்டில் பதில் பதிவிடப்பட்டிருக்கிறது.