manipur pt web
இந்தியா

”இந்த சம்பவத்தால் தற்கொலை செய்ய நினைத்தேன்”-கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மற்றொரு மணிப்பூர் பெண்

மணிப்பூரில் மேலும் ஒரு பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகப் போலீஸில் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மணிப்பூர் வன்முறை: மேலும் ஒரு பெண் பாதிப்பு!

உலகமே விவாதிக்கூடிய அளவுக்கு மாறியிருக்கிறது, மணிப்பூர் வன்முறை குறித்த செய்திகள். அதிலும் குக்கி இனப் பெண்களின் நிர்வாண வீடியோ வெளிவந்து, உலக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என நாடாளுமன்ற அவைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றனர் எதிர்க்கட்சிகள்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களும் பலர் உள்ளனர். அந்த வகையில், இன்னொரு பெண் ஒருவரும் மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டதாகவும், சமூகப் புறக்கணிப்பிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே அதை வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்: டெல்லியின் முக்கியப் பகுதிகளில் 144 தடை!

மணிப்பூர் கலவரம்

”கீழே விழுந்த என்னை வன்முறையாளர்கள் பிடித்தனர்”

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்தான், இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “கடந்த மே 3ஆம் தேதி வன்முறை பற்றி எரிந்தது. அன்று மாலை 6.30 மணியளவில் எங்களுடைய வீடும் வன்முறையில் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதிலிருந்து தப்பிப்பதற்காக என் குடும்பத்தில் இருந்த என் 2 மகன்கள், மருமகள், மைத்துனர் உள்ளிட்டோர் வெளியேறினோம். அவர்கள் எல்லாரும் வேகமாய் ஓடினர். நானும் வேகமாக ஓடும்போது திடீரென கால் தவறி கீழே விழுந்துவிட்டேன். உடனே என் மைத்துனி எனை நோக்கி வந்தார். நான் அவரிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு ஓடும்படி அறிவுறுத்தினேன். அவரும் ஓடிவிட்டார். அப்போது என்னால் உடனே எழுந்திருக்க முடியவில்லை.

இதையும் படிக்க: 3 நாட்கள் மீதமிருக்கையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைக்கப்பட்டது ஏன்?- பின்னணி இதுதான்!

”இந்த சம்பவத்தால் தற்கொலை செய்ய நினைத்தேன்!”

பின்னர், நான் சுதாரித்து எழுவதற்குள் வன்முறையாளர்கள் 6 பேர் என்னைப் பிடித்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் என்னைக் கடுமையான வார்த்தைகளால் திட்டத் தொடங்கியதுடன், பாலியல் வன்புணர்விலும் ஈடுபட்டனர். இதனால் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு, மருத்துவரிடம் நடந்த விஷயத்தைச் சொல்ல முடியாமல் சிகிச்சை பெறாமலேயே உடனே திரும்பி வந்துவிட்டேன். பின்னர் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், வேறொரு மருத்துவமனையில் அணுகி சிகிச்சை பெற்றேன். ஒருகட்டத்தில், இந்த விஷயத்தால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தேன். நான் எனது குடும்பத்தின் நலன் கருதி இதனை வெளியில் சொல்லாமல் இருந்தேன். ஆனால், இப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி வேண்டி குரல் கொடுத்துவரும் சூழலில் நான் துணிந்து புகார் கொடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”போருக்கு ஆயத்தமாகுங்கள்” - அதிகாரிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு

மணிப்பூர் கலவரம்

ஜீரோ எஃப்.ஐ.ஆர் பிரிவில் வழக்குப் பதிவு

அவருடைய இந்தப் புகார் ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ என்ற வகையில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 376டி, 354, 120பி மற்றும் 34 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்பது, எந்த காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்படலாம். குற்றம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில்தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. அதேநேரத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையம் எஃப்.ஐ.ஆரை சரியான அதிகார வரம்பிற்கு அனுப்ப வேண்டும். அதன்பேரில் வழக்கு விசாரிக்கப்படும்.

3 மாதங்கள் ஆகியும் மணிப்பூரில் தொடரும் வன்முறை

மணிப்பூரில் வன்முறை வெடித்து 3 மாதங்கள் ஆகியும் தற்போதுவரை அமைதியை மீட்டெடுக்க முடியாத நிலை உள்ளது. அவ்வப்போது துப்பாக்கிச் சூடு, எதிர்பாராத தாக்குதல் என அசாதாரண சூழல் நிலவுகிறது. மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோதல் ஏற்பட்ட பகுதிகளில் 144 தடை அமலில் உள்ளது.

Manipur Violence

6,500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளுடன் மணிப்பூரை சேர்ந்த 40 சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். அதில், மணியூரின் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மே 3 முதல் ஜூலை 30 வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் 6,500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: “எதிர்க்கட்சிகள் திரும்ப திரும்ப ’நோ’ பால் போடுறாங்க”-நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் பதிலுரை