தினேஷ் Kr சரோகி - பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஃபேஸ்புக்
இந்தியா

பாலியல் தொல்லை கொடுத்த ஜிண்டால் நிர்வாகி! பெண்ணின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நவீன் ஜிண்டால்!

ஜெனிட்டா ரோஸ்லின்

ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர், விமானத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு, ஆபாச வீடியோ காட்டியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் தனது வேலை சார்ந்த பணிக்காக கொல்கத்தாவில் இருந்து அமெரிக்காவின் போஸ்டனுக்கு அபுதாபி செல்லும் எதிகார் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்துள்ளார்.

தினேஷ் Kr சரோகி - பாலியல் தொல்லை கொடுத்த நபர்

அப்போது அவரது அருகில் இருந்த சுமார் 65 வயது நிரம்பிய தினேஷ் Kr சரோகி என்ற நபர் , இப்பெண்ணுடன் உரையாடலை மேற்கொண்டுள்ளார். மேலும், தன்னை பற்றி இப்பெண்னிடம் தெரிவித்த அவர், ”நான் ராஜஸ்தானில் உள்ள சுருவை சேர்ந்தவன். நான் தற்போது ஓமனில் வசிக்கிறேன். அடிக்கடி பயணம் மேற்கொள்வேன். எனக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். ஆகவே, உங்களுக்கு ஏதாவது ஆதரவு தேவைப்பட்டால், என்னிடம் கேளுங்கள்.” என்று கேட்டுள்ளார்.

இதனையடுத்து, இப்பெண்ணிடம் இவரின் பொழுதுபோக்கு என்னவென்று கேட்டபடியே அவரின் அருகில் நகர்ந்துள்ளார். பிறகு, திரைப்படம் பார்க்க விருப்பம் உண்டா என்று கேள்வி எழுப்பிய தினேஷ், தனது போனையும், ஹெட்போனையும் இப்பெண்ணுக்கு கொடுத்து பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு, சரி என்று அப்பெண்னும் சொல்லவே, அவரின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் சிலவற்றை இப்பெண்ணுக்கு காண்பித்ததுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த இப்பெண், செய்வதறியாது திகைத்தபோது, பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார் தினேஷ்.

இது குறித்த ஆங்கில செய்திநிறுவனத்திற்கு பேட்டியளித்த இப்பெண் தெரிவிக்கையில்,” அவர் என்னிடம் ஆபாச வீடியோக்கள் சிலவற்றை காண்பித்து, என்னை பாலியல் சீண்டல் செய்தார். எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறி, கழிவறைக்கு ச்சென்றேன். அங்கிருந்த விமான ஊழியர்களை அணுகினேன்.

நடந்தவற்றை அவர்களிடம் எடுத்து கூறினேன். பிறகு என்னை உட்கார வைத்து தேநீர் மற்றும் பழங்களை கொடுத்தார்கள். நான் மேலும், நான் அந்த நபரிடமிருந்து தப்பித்து ஓடி வந்துவிட்டதால், ’நான் எங்கே சென்றேன்’ என விமானப் ஊழியர்களை அழைத்து அந்த நபர் விசாரித்துள்ளார் என்று அங்கிருந்த பெண் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அபுதாபி போலீசாருக்கு ஏர்லைன் தகவல் தெரிவித்தது. இரண்டு போலீஸ் அதிகாரிகள் விமானம் தரையிறங்கும் இடத்தில் தயாராக நின்றனர். ஆனால், நான் போஸ்டன் விமானத்தை தவற விட நேரும் என்பதால் அவர்களிடம் புகார் ஏதும் அளிக்கவில்லை.

பிறகு அந்த நபரிடமிருந்து தப்பிக்க, மற்ற நுழைவுவாயில் வழியாக பாதுகாப்பாக விமான ஊழியர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள். இதன்பிறகு போலீசார் அந்த தினேஷிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நடந்தது எதையும் அந்த நபர் மறுக்கவில்லை...என்னிடம் மன்னிப்பு கேட்கத்தயாராக இருப்பதாகவும் போலீசார் என் இடத்தில் தெரிவித்தனர். எதற்காக எனக்கு நடந்த சம்பவத்தை நான் ஏன் கூறுகிறேன் என்றால், மற்றவர்களுக்கு இது போன்று எதுவும் நடைபெறக்கூடாது என்பதற்காகதான்.” என்று தெரிவித்து தனது சமுக வலைதளப்பக்கத்தில் இது குறித்து பதிவையும் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, இப்பெண்ணுக்கு பதிலளித்த நவீன் ஜிண்டால், "இது குறித்து வெளியில் பேசியதற்கு நன்றி! இதற்கென தனி தைரியம் வேண்டும். இதுபோன்ற விஷயங்களை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டோம், என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்.

ஆகவே, இது குறித்து, உடனடியாக விசாரிக்கும்படியும், அதன்பிறகு கடுமையான மற்றும் தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும் என் குழுவிடம் நான் கேட்டு கொண்டுள்ளேன்.” என்று பதில் அளித்துள்ளார்.