இந்தியா

நாளை தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மர்கரெட் ஆல்வா தோல்வியை சந்திப்பது ஏன்?

நாளை தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மர்கரெட் ஆல்வா தோல்வியை சந்திப்பது ஏன்?

webteam

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜகதீப் தன்கர் சுலபமாக வெற்றி பெறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகிறார்கள். எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மர்கரெட் ஆல்வா தோல்வியை சந்திப்பது ஏன்? கள நிலவரத்தை விரிவாக பார்க்கலாம்...

குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள்; அதாவது மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள். தற்போதைய நிலவரப்படி 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இதிலே 543 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் அடக்கம். வெற்றி பெற குறைந்தபட்சம் 395 ஓட்டுகள் தேவை என்கிற சூழலில், பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள வலுவான பெரும்பான்மையால், ஜகதீப் தன்கர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் மர்கரெட் ஆல்வாவை தோற்கடித்து நாட்டின் 14 வது குடியரசு துணைத் தலைவராக தேர்வு பெறுவார் என பாஜக தலைவர்கள் நம்பிக்கையுடன் வாக்கு எண்ணிக்கைக்கு காத்திருக்கின்றனர்.

பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களவையில் 303 மற்றும் மாநிலங்களவை 91 என நாடாளுமன்றத்தில் மொத்தம் 394 உறுப்பினர்கள் உள்ளனர். இதுவே குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஒரு பாதி வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா காலத்துக்கு 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள், லோக் ஜன சக்தி கட்சிக்கு ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவுக்கு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வெற்றிக்கு இந்த எண்ணிக்கையை போதும் என்கிற நிலையில், மேலும் பல கட்சிகள் ஜகதீப் தன்கருக்கு ஆதரவளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

21 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிவ சேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால், ஏக்நாத் ஷிண்டே ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும் பாஜக வேட்பாளருக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. அத்துடன் 31 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிஜு ஜனதா தளம் கட்சிகளும் குடியரசு தலைவர் தேர்தலை போலவே பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளன.

இப்படி ஒருபுறம் ஜகதீப் தன்கர் அசைக்க முடியாத வலிமையுடன் களத்தில் உள்ள நிலையில், மர்கரெட் ஆல்வா ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு காங்கிரஸ் கட்சியின் 84 வாக்குகளை முக்கிய ஆதரவாக உள்ளது. அடுத்தபடியாக 34 வாக்குகள் கொண்ட திமுக எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.

36 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குடியரசு துணைத்தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது மர்கரெட் ஆல்வாவுக்கு பெரிய பின்னடைவு  என்பதில் ஐயமில்லை. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் 16 வாக்குகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பத்து வாக்குகள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு தான் என அறிவிக்கப்பட்டிருப்பதால் பெரிய வித்தியாசம்  இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகிறார்கள்.

9 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் 6 உறுப்பினர்களைக் கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரவு மர்கரெட் ஆல்வாவுக்கு கிட்டியுள்ளது என்றாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பது எண்ணிக்கைகளில் தெளிவாகிறது. இதனால் நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவராக முன்னாள் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான இவர் அடுத்த வாரம் நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவராக பதவி ஏற்பார் என முழு நம்பிக்கையுடன் பாஜக தலைவர்களும் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை வாக்களிப்பு நடைபெற உள்ளது. மக்களவை உறுப்பினர்கள் ஒருபுறமும், மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்னொரு புறமும் வாக்குகளை பதிவு செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு வாக்குகள் எண்ணும் பணி விரைவாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் நாடாளுமன்ற வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.

- கணபதி சுப்பிரமணியம்

இதையும் படிக்க: வியாபிக்கும் குற்றங்கள் ; நான்கு புறமும் பளிச்சிடுகிறதா VICTIM?? விமர்சனம்