கொரோனா நோய்த் தொற்று காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் மக்கள் பல்வேறு விதமான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, ஊரடங்கு காலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் நாள் தோறும் வெளியே வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வெளியே வந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் உள்ள குகை ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் தங்கியிருப்பதாக அம்மாவட்ட வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. வனத்துறையினர் போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர். அந்த நபரிடம் சில துணிகளும், மகாபாரத புத்தகம் மட்டும் இருந்துள்ளது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மகாராஷ்டிர மாநிலத்தின் நேவி மும்பை பகுதியைச் சேர்ந்த விரேந்திர சிங் டோக்ரா என்பது தெரியவந்தது. பொறியாளரான அவர் ஊரடங்கு தொடங்கிய மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதலில் அவர் அந்தக் குகையில்தான் இருந்து வருகிறார்.
மென்பொருள் பொறியாளரான டோக்ரா ஆன்மிக யாத்திரைகள் அடிக்கடி போவது வழக்கம். அந்த வகையில் நேவி மும்பையிலிருந்து அவர் நர்மதா பரிகரமா யாத்திரை மேற்கொண்டுள்ளார். நர்மதை நதி முடிவடையும் குஜராத்தின் கடலோர பகுதி வரை இந்த யாத்திரையை நடந்தே மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஆனால், ஊரடங்கு காரணமாக மத்தியப் பிரதேசத்திலே யாத்திரையைப் பாதியில் நிறுத்தியுள்ளார்.
மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட மார்ச் 22ம் தேதி அவர் குவந்தேவ்ரி கிராமத்தில் உள்ள தன்னுடைய உறவினர் இல்லத்தில் தங்கியிருந்தார். நேற்று அவர் குகையில் இருப்பதை அந்த வழியாக வந்த பசு மேய்ப்பவர் பார்த்துள்ளார். பின்னர், வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார் அந்த நபர். பின்னர் போலீசாருடம் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடக்கத்தில் தான் நேவி மும்பையைச் சேர்ந்தவன் என்று டோக்ரா சொன்ன போது போலீசார் நம்பவில்லை. பின்னர், அவரது தங்கையில் எண்ணை வாங்கி அவரிடம் பேசிய பின்னர் போலீசார் நம்பினர். பின்னர், அந்தக் குகையிலிருந்து மீண்டும் குவந்தேவ்ரி கிராமத்திற்கு அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.