இந்தியா

"இணைந்து பணியாற்றுவோம்" - பஞ்சாப் புதிய முதல்வருக்கு பிரதமர் மோடி அழைப்பு

"இணைந்து பணியாற்றுவோம்" - பஞ்சாப் புதிய முதல்வருக்கு பிரதமர் மோடி அழைப்பு

ஜா. ஜாக்சன் சிங்

பஞ்சாப் புதிய முதல்வராக பதவியேற்ற பகவந்த் மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. அங்கு நீண்டகாலமாக ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸையும், சிரோன்மணி அகாலி தளத்தையும் பின்னுக்கு தள்ளி, மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக, ஆம் ஆத்மியின் பகவந்த் மான், பஞ்சாபின் புதிய முதல்வராக இன்று பதவியேற்றார். சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த ஊரில் அவர் பதவியேற்றது பஞ்சாப் மக்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் மானுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாப் வளர்ச்சிக்காகவும், அம்மாநில மக்களின் நலனுக்காகவும் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்" என அதில் மோடி கூறியுள்ளார்.