இந்தியா

"யாருடைய ஆத்மாவையும் உலுக்கும் லக்கிம்பூர் வீடியோ " - பாஜக எம்.பி வருண்காந்தி ட்வீட்

"யாருடைய ஆத்மாவையும் உலுக்கும் லக்கிம்பூர் வீடியோ " - பாஜக எம்.பி வருண்காந்தி ட்வீட்

Veeramani

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏறிச்செல்லும் வைரல் வீடியோவை பகிர்ந்துள்ள பாஜக எம்.பி வருண் காந்தி , இந்த வீடியோ யாருடைய ஆத்மாவையும் உலுக்கும் என ட்வீட் செய்திருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது, அவர்களின் மீது கார் ஏறி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காரில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக வருண் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டில், "லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார்கள் ஏறி செல்வதைக் காட்டும் வீடியோ யாருடைய உள்ளத்தையும் உலுக்கும். இந்த வீடியோவை போலீசார் கவனத்தில் எடுத்து காரின் உரிமையாளர்கள், காரில் அமர்ந்திருப்பவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்" என்று கூறினார்.

லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறை தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது இப்போது தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த வழக்கைக் கையாள்வது குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த சம்பவம் உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன், இது பற்றி தீவிர கவலை தெரிவித்துள்ள ஒரே ஒரு பாஜக தலைவர் வருண் காந்தி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.