இந்தியா

“கொரோனா வைரஸை கண்டால் ஃபட்னாவிஸ் வாயில் போடுவேன்”: சிவசேனா எம்.எல்.ஏ

“கொரோனா வைரஸை கண்டால் ஃபட்னாவிஸ் வாயில் போடுவேன்”: சிவசேனா எம்.எல்.ஏ

Veeramani

“நான் கொரோனா வைரஸை கண்டால், அதைப்பிடித்து  தேவேந்திர ஃபட்னாவிஸ் வாயில் போடுவேன்” என்று சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்த கருத்து சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.

ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்ததாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனத்தின் உயர் அதிகாரியை மும்பை காவல்துறையினர் விசாரிப்பதை எதிர்த்ததற்காக, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை மகாராஷ்டிரா ஆளும் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இது தொடர்பாக பேசிய சிவசேனா எம்.எல்.. சஞ்சய் கெய்க்வாட்,  “இந்த கொரோனா பரவல் காலத்தில் முதலமைச்சராக இருந்திருந்தால் ஃபட்னாவிஸ் என்ன செய்திருப்பார். இந்த நெருக்கடியில் மாநில அமைச்சர்களுக்கு ஆதரவு தருவதை விட, ஆட்சியை விமர்சிக்கவே பாஜகவினர் காரணம் தேடுகிறார்கள். எனவே, நான் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்திருந்தால், அதை தேவேந்திர ஃபட்னவிஸின் வாயில் போட்டிருப்பேன்" என்று கூறினார்.

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பாஜக அலுவலகத்தில் இருந்து குஜராத்திற்கு 50,000 எண்ணிக்கையிலான ரெம்டெசிவர் மருந்தினை இலவசமாக வழங்குகிறார்கள், அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் செய்ய வேண்டிய நேரம் இதுதானா? மத்திய அரசும் ஃபட்னாவிசும் தங்கள் செயல்களுக்கு வெட்கப்பட வேண்டும் என்றும் கெய்க்வாட் குற்றம்சாட்டினார்.

கெய்க்வாட்டின் கருத்துகளை எதிர்த்து, பாஜக தொண்டர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக பேசிய ஃபட்னாவிஸ், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தனக்கு எதிரான எந்த விசாரணையையும் கண்டு அஞ்சவில்லை என்றும் கூறினார்.