pawan kalyan, modi twitter
இந்தியா

ஆந்திரா | பிதாபுரம் தொகுதியில் மாபெரும் வெற்றி.. எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறாரா பவன் கல்யாண்?

இரா.செந்தில் கரிகாலன்

பவன் கல்யாண் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளரான வங்கா கீதாவைவிட எழுபதாயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாது அவரின் ஜனசேனா கட்சி மொத்தமாக போட்டியிட்ட 21 தொகுதிகளில் 5 தொகுதிகளில் வெற்றி, 16 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளது. இந்த நிலையில், பவனின் அரசியல் பயணம் குறித்து பார்க்கலாம்...

பவன் கல்யாண்

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவின் தம்பிதான் பவன் கல்யாண். சிரஞ்சீவியைப் போலவே பவன் கல்யாணுக்கும் மிகப்பெரிய ரசிகப் பட்டாளம் உண்டு. அரசியல் என்று பார்த்தால், 2008-ம் ஆண்டு சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கியபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டார் பவன் கல்யாண். அந்தக் கட்சியின் இளைஞர் அமைப்பான யுவராஜ்ஜியத்தின் தலைவராகவும் இருந்தார், அந்தக் கட்சி 2009 தேர்தலில் போட்டியிட்டபோது பவன் கல்யாண் போட்டியிடவில்லை.

பின்னர், சிரஞ்சீவி காங்கிரஸில் தனது கட்சியை இணைத்த பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் கல்யாண். 2014-ம் ஆண்டு ஜனசேனா என்னும் கட்சியை தொடங்கினார். அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்தார் பவன் கல்யாண். 2018-ம் ஆண்டு தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து வெளியேறினார் பவன் கல்யாண்.

தொடர்ந்து, 2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து 140 தொகுதிகளில் போட்டியிட்டது ஜனசேனா. பவன் கல்யாண், கஜவாகா மற்றும் பீமாவரம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே தோல்வியுற்றார்.

பவன் கல்யாண் - வங்கா கீதா

ஜனசேனா கட்சி 5.5 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இருந்தபோதும் பவனுக்கு கிடைத்த ஆதரவு அவர் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் அவருக்குக் கூடிய கூட்டத்தை ஒப்பிடும்போது அது மிகுந்த ஏமாற்றம்தான்.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் தெலுங்குதேசம், பாஜக உள்ளடக்கிய பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தார் பவன் கல்யாண். அவரின் கட்சிக்கு 21 தொகுதிகள் சட்டமன்றத்துக்கும் 2 தொகுதிகள் நாடாளுமன்றத்துக்கும் ஒதுக்கப்பட்டது. பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் களமிறங்கினார். பிதாபுரம் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பாக, வங்கா கீதாவை வேட்பாளராக களமிறக்கினார் ஜெகன்.

தற்போது அந்தத் தொகுதியில் வங்கா கீதாவை விட கிட்டத்தட்ட 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாது, ஆந்திராவில் எதிர்க்கட்சியாக அமர, 18 இடங்களில் வெல்ல வேண்டும். தற்போது வரை 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி. ஆனால், ஜனசேனா மொத்தமாக போட்டியிட்ட 21 தொகுதிகளில் 5 தொகுதிகளில் வெற்றி, 16 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால், பவன் கல்யாண், எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.