இந்தியா

லக்னோ வருகை தரும் மோடி லக்கிம்பூருக்கும் வருகை தருவாரா?-பிரியங்கா காந்தி கேள்வி

லக்னோ வருகை தரும் மோடி லக்கிம்பூருக்கும் வருகை தருவாரா?-பிரியங்கா காந்தி கேள்வி

Veeramani

லக்னோவுக்கு செல்லும் பிரதமர் மோடி, விவசாயிகள் துன்பத்தை அனுபவிக்கும் லக்கிம்பூர் பகுதிக்கும் செல்வாரா என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்கிம்பூரில் விவசாயிகளை காண சென்ற பிரியங்கா காந்தி நேற்று காவல்துறையினரால் தடுக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் விவசாயிகள் மீது கார் மோதும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரியங்கா காந்தி, எந்த வழக்குப்பதிவும் எந்த உத்தரவுமின்றி தன்னை காவலில் வைத்திருக்கும் அரசு, விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றவர்களை இன்னும் கைது செய்யாதது ஏன் என வினவியுள்ளார். இதனை தொடர்ந்து மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ள அவர், லக்னோவிற்கு வருகை தரும் மோடி , லக்கிம்பூர் விவகாரம் குறித்து பேசுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார். இச்செயலை செய்த மத்தியமைச்சர் மகன் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என நாட்டு மக்களுக்கு விளக்குவீர்களா என பிரதமர் மோடியை வினவியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை லக்கிம்பூர் கேரி பகுதியில் மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் வருகையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவே காரை ஓட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச காவல்துறையினர் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும் இதுவரை அவரை கைது செய்யவில்லை.