திரிணாமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நாடாளுமன்ற நன்னடத்தை குழு பரிந்துரை அளித்துள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா மக்களவையில் தொழிலதிபர் ஹிராநந்தானி சார்பாக கேள்வி கேட்க பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. மேலும் தனது அலுவல்பூர்வமான மின்னஞ்சல் முகவரியை தொழிலதிபர் பயன்படுத்த அனுமதித்ததாகவும் சர்ச்சை எழுந்துது. இதுகுறித்து மக்களவை நெறிகள் குழு மகுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது.
இதன் முடிவில் அவரது மக்களவை உறுப்பினர் பதவியை பறிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு பாஜக உறுப்பினர் வினோத் குமார் சொங்கர் தலைமையிலான குழு பரிந்துரை அளித்துள்ளது. மகுவா மொய்த்ராவின் பதவி பறிப்பிற்கு ஆதரவாக அபராஜிதா சாரங்கி, ஹேமந்த் கோட்சே, சுமேதானந்த், பிரீனீத் காவுர், ராஜ்தீப் ராய், மற்றும் குழுவின் தலைவர் வினோத் சோன்கர் ஆகியோர் வாக்களித்தனர். தனிஷ் அலி, நடராஜன், வைத்திலிங்கம் மற்றும் கிரிதர் யாதவ் ஆகியோர் எதிராக வாக்களித்தனர்.
நெறிகள் குழு அளித்துள்ள பரிந்துரை மீது மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் அதிக வாக்குகள் கிடைக்கும் பட்சத்தில் மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்படும். மகுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அணி திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தனக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் சட்ட நெறிமுறைகளை பின்பற்றாமல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் மகுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். தன்னை நீக்கினாலும் மீண்டும் தேர்தலில் நின்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அவைக்கு வரப்போவது உறுதி என்றும் மகுவா கூறினார்.
5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் மூன்றாம் தேதி வெளிவர உள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. கூட்டத் தொடரின் முதல் வாரத்திலேயே சர்ச்சைக்குரிய இந்த அறிக்கை தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.