ஜார்கண்ட் கோப்புப்படம்
இந்தியா

ஜார்கண்ட்: முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பாஜகவில் இணையவுள்ளாரா? சமூகவலைதளத்தில் பதிவிட்டது என்ன?

PT WEB

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் சிறையில் இருந்த போது சம்பாய் சோரன் முதலமைச்சராக இருந்தார். ஹேமந்த் சோரன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், முதல்வர் பதவியை விட்டு விலகிய சம்பாய் சோரன் தற்போது ஜார்கண்ட் நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார்.

ஹேமந்த் சோரன், சம்பாய் சோரன்

விரைவில் ஜார்கண்ட் மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் பாஜகவில் சேரவுள்ளதாக தகவல் வெளியானது. கொல்கத்தாவில் பாஜகவைச் சேர்ந்த சுவெந்து அதிகாரியை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே சம்பாய் சோரன் தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் கட்சி பொறுப்பை நீக்கிவிட்டார்.

இந்நிலையில் டெல்லி வந்த அவரிடம் இது குறித்து கேட்டபோது தாம் இருக்கும் இடத்திலேயே இருப்பதாக கூறினார். ஆனால், அதைத் தொடர்ந்து அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட விரிவான அறிக்கையில், “முதலமைச்சராக இருந்தபோது நான் அவமானப்படுத்தப்பட்டேன். ஜூலை 3ஆம் தேதி முதலமைச்சராக நான் கலந்துகொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் கட்சி தலைமையால் ரத்து செய்யப்பட்டது.

காரணத்தை கேட்டபோது ‘கட்சி எம்.எல்.ஏக்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் வரை எந்த அரசு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள முடியாது’ என்றனர். ஒரு முதல்வரின் நிகழ்ச்சி வேறு ஒரு நபரால் ரத்து செய்யப்படுவதை விட அவமானகரமானது ஏதேனும் இருக்கமுடியுமா? இப்போதும் என்முன் அனைத்து வாய்ப்புகளும் திறந்து இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் பாஜக-வில் இணைய உள்ளாரா, அந்த வாய்ப்புகள் அவர்முன் இருப்பதையே இப்படி குறிப்பிட்டுள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.