குஜராத்தில், தலித் இளைஞர்கள் மீசை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல் சாதியினர் நடத்திய தாக்குதலை அடுத்து, மீசை முறுக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் பியூஷ் பர்மார் (24). தலித் பிரிவைச் சேர்ந்த இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் கம்பீரமாக முறுக்கு மீசையுடன் அலைவார். இது, உயர் சாதி இளைஞர்கள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு அவரை, உயர் சாதி இளைஞர்கள் சிலர் தாக்கியுள்ளனர். பியூஷின் உறவினருக்கும் அடி உதை விழுந்துள்ளது. இதையடுத்து,அதே கிராமத்தில் கிருனாஸ் மகேரியா என்ற 30 வயது தலித் இளைஞரை தாக்கிய உயர்சாதி கும்பல், அடித்து உதைத்து, மீசையை துண்டித்து அவமானப்படுத்தியது.
இதையடுத்து தலித் இளைஞர்கள் அகமதாபாத் மற்றும் காந்திநகர் மாவட்டங்களில் ‘ட்விட்டர்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மீசையால் ஏற்பட்ட அவமானம் குறித்து பிரசாரம் செய்தனர். அப்போது மீசையை முறுக்கி விட்டபடி செல்பி எடுத்து போட்டோவை வெளியிட்டனர். ‘மீசை வளர்ப்பது எங்களின் அரசியல் உரிமை’ என அதில் பதிவு செய்தனர். இதையடுத்து முறுக்கிய மீசையுடன் கூடிய புகைப்படத்தை 'வாட்ஸ் ஆப்-பில் பரப்பும் போராட்டத்தில், தலித் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். 'மிஸ்டர் தலித்' என்ற பெயரில், மீசையை முறுக்கும் படங்களை, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பரப்பி வருகின்றனர்.