இந்தியா

“விரைவில் வேலைக்குச் செல்வேன்” - கொரோனாவில் இருந்து மீண்ட கேரள நர்ஸ் பேட்டி 

“விரைவில் வேலைக்குச் செல்வேன்” - கொரோனாவில் இருந்து மீண்ட கேரள நர்ஸ் பேட்டி 

webteam

கொரோனா நோய்த் தொற்று பரவி வரும் இந்தக் காலகட்டத்தில் கேரளாவில் பல நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்திலிருந்து கேரளாவுக்குத் திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவருக்கு அந்த மாநிலத்தில் செவிலியர் மாணவி ஒருவர் சிகிச்சை அளித்த  நிகழ்வு சமீபத்தில் பலரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. ‘மன் கீ பாத்’ ட்விட்டர் தளத்தில் வெளியான இந்தச் செய்தியின் மூலம் மாணவி மிருதுளா எஸ். ஸ்ரீ இந்திய அளவில் பேசு பொருளாக மாறினார். 

அதேபோல் 93 வயதான முதியவர் தாமஸ் கொரோனாவில் இருந்து மீண்ட நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.  இப்படி ஆச்சரியத்தை ஏற்படுத்திய மற்றொருவர்  எடி மரியம்மே. 93 வயதான முதியவர் தாமஸின் மனைவிதான் இவர்.  கோட்டயம் மருத்துவக் கல்லூரியில்  கொரோனா நோய்த் தொற்றுக்காக இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இவரிடம் இருந்து இவரது 88 வயதான மனைவி மரியம்மே மற்றொரு படுக்கையில் படுத்து சிகிச்சை பெற்றுவந்தார். அவர்  நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

இதனிடையே இவர்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த நர்ஸ் ரேஷ்மா மோகன்தாசுக்கு 10 நாட்களுக்குப் பிறகு,  கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது.  மார்ச் 24 அன்று, அவரது சோதனை நேர்மறையானது என்பது உறுதி செய்யப்பட்டது. அருகிலிருந்து இவர்களைக் கவனித்து வந்ததால் இந்தத் தொற்று இவரைத் தாக்கியது. இந்தச் செய்தி கேரள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் நர்ஸ் ரேஷ்மா மோகன்தாஸ் கொரோனா நோயிலிருந்து மீண்டுள்ளார்.   குணமடைந்த இவர், நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால் திரிபுனிதுராவில் உள்ள அவரது வீட்டில் அவர் இன்னும் இரண்டு வாரங்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு திரும்பியுள்ள அவரை ‘தி நியூஸ் மினிட்’ செய்தி தளம் பேட்டி எடுத்துள்ளது. 

அப்போது அவர், "தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யுவில்  10 நாள் பணியாற்றிய  பிறகுதான் முதல் அறிகுறிகள் இருப்பதை உணர்ந்தேன்.   சளி மட்டுமே இருந்தது.  நான் அதைத் தலைமை செவிலியரிடம் தெரிவித்தேன், அவர் நர்சிங் கண்காணிப்பாளர்களுக்கும் மருத்துவமனைகளின் மருத்துவர்களுக்கும் தகவல் கொடுத்தார். நான் மருத்துவமனையின் விடுதியில் தங்கியிருந்தேன். என் நண்பர்கள் காய்ச்சல் மருத்துவமனைக்கு என்னுடன் வருவதாக எனச் சொன்னார்கள். ஆனால் நான் தனியாகச் சென்றேன். நான் அவர்களுக்குப் பயந்தேன்.  எனது மாதிரிகளை சோதித்தனர். 

பிறகு நான் ஒரு தனிமை வார்டுக்கு மாற்றப்பட்டேன். அடுத்த நாள், தலைமை செவிலியரிடமிருந்து எனக்கு அழைப்புகள் வரத் தொடங்கியபோது. நான் யார் யாருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தேன் என்று கேட்டபோது, சோதனை பாசிடிவ் ஆக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்” என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ள ரேஷ்மா, 'விரைவில் வேலைக்குச் செல்வேன்' என்று தைரியமாகத் தெரிவித்துள்ளார்.