இந்தியா

பத்மாவத் வெளியாகும் திரையரங்குகளை கொளுத்துவோம்: ராஜ்புத் அமைப்பு எச்சரிக்கை

பத்மாவத் வெளியாகும் திரையரங்குகளை கொளுத்துவோம்: ராஜ்புத் அமைப்பு எச்சரிக்கை

rajakannan

'பத்மாவத்' திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை கொளுத்துவோம் என்று ராஜ்புத் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தீபிகா படுகோனே நடிப்பில் உருவான 'பத்மாவத்' திரைப்படம் குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளியாகாது என்று அம்மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பத்மாவத் திரைப்படம் வெளியாவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ராஜ்புத் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் பத்மாவத் படத்திற்குத் தங்களுடைய மாநிலத்தில் தடைவிதிக்கக் கோரி உள்துறை அமைச்சர் ராம்சேவஜ் பைக்ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், “இது எங்களுடைய கடைசி எச்சரிக்கை. ராணி பத்மாவதியின் தன்மானத்துடன் யாரும் விளையாட அனுமதிக்க மாட்டோம். படத்தை வெளியிடும் சினிமா தியேட்டர்களைத் தீ வைத்து கொளுத்துவோம். படத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. முழுவதுமாக படத்தைத் தடை செய்ய வேண்டும்” என்றனர்.

ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திரா சிங் கல்வி கூறுகையில், “பத்மாவத் திரைப்படம் வெளியாவதை அனைத்து அமைப்புகளும் தடுத்து நிறுத்த வேண்டும். 'பத்மாவதி' படம் வெளியிடும் திரையரங்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு போன்ற ஒரு சூழலை உருவாக்க வேண்டும்” என்றார். “சமூகத்தின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் சர்ச்சைக்குரிய 'பத்மாவத்' படம் வெளியாவதை தடுக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.