அடுத்து வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் வதந்தி என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வங்கிகள் அடுத்த வாரம் முழுவதும் செயல்படாது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் நேற்று முதலே பல வங்கிகளில் கூட்டம் குவியத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை என்பது சரியான தகவல் இல்லை என நிதிஅமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு சில மாநிலங்களில் மட்டுமே திங்கட்கிழமை அன்று ஜன்மாஷ்டமி பண்டிகைக்கான விடுமுறை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நேரத்தில் மக்களுக்கு பிரச்னை இல்லாமல் இருக்க ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவுக்கு கரன்சி நோட்டுகளை இருப்பில் வைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் அடுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் செயல்படாது என்பது தவறு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என அறிவித்திருந்ததை, தவறாக எல்லா வங்கிகளும் வேலைநிறுத்தம் என திரிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வங்கி சேவைகளை பெறுவதில் வாடிக்கையாளர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது. அடுத்த வாரம் முழுவதும் வங்கிகள் திறந்திருக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம். செப்டம்பர் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு அடுத்த சனிக்கிழமை செப்டம்பர் 8ஆம் தேதிதான் விடுமுறை என்று நிதியமைச்சகம் கூறியுள்ளது.