காட்டு யானை File Image
இந்தியா

"மொத்தம் 5 டோஸ் மயக்க மருந்து" அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க படாதபாடுபட்ட வனத்துறையினர்!

மூணாறு அருகே கடந்த ஐந்து ஆண்டுகளாக அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை, துப்பாக்கி மூலம் 5 டோஸ் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

PT WEB

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரிசிக்கொம்பன் காட்டு யானையின் அட்டகாசம் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து துவங்கியது. தற்போது அரிசி கொம்பன் யானையின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் அச்சமும் பீதியும் அடைந்தனர். சின்னக்கானல் பகுதியில் அரிசிக்கொம்பன் காட்டு யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

யானையை பிடிப்பதற்கான முயற்சி நேற்று துவங்கியது. யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்புப் படை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் என 150 பேர் பங்கேற்றனர். இதற்காக சின்னக்கானல் ஊராட்சி மற்றும் சாந்தன்பாறை ஊராட்சிக்குட்பட்ட 1, 2 மற்றும் 3 வார்டுகளில் நேற்றும் இன்றும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் அரிசிக்கொம்பன் யானை சூரியநெல்லி பகுதியில் உள்ள சிமென்ட் பாலம் அருகே இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் ரப்பர் தோட்டத்திற்குள் மறைந்த.அரிசிக்கொம்பனை காணாததால் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பணி நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளாக அரிசிக்கொம்பனை பிடிக்கும் பணி சனிக்கிழமை துவக்கப்பட்டது.

சின்னக்கானல் சங்கரபாண்டியமேட்டில் அடர்ந்த அரிசிக்கொம்பன் இருந்ததை வனத்துறையினர் பார்த்தனர். உடனே சுதாரித்த வனத்துறையினர் துப்பாக்கி மூலம் முதல் மயக்கம் மருந்து டோசை காலை 11.45 மணிக்கு செலுத்தினர்.

முதல் டோஸில் யானை மயக்கம் அடையவில்லை. இதையடுத்து அரிசிக்கொம்பனுக்கு இரண்டாவது பூஸ்டர் டோஸ் மதியம் 12.43 மணிக்கு கொடுக்கப்பட்டது. இருந்தாலும் பலன் இல்லாததால் தொடர்ந்து ஐந்து முறை துப்பாக்கி மூலம் ஐந்து டோஸ்கள் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அரை மணி நேரத்தில் யானை மயக்கமடைந்தது. மயக்கம் அடைந்த அரிசிக்கொம்பன் யானையின் பின்னங்கால்கள் வடக்கயிறால் கட்டப்பட்டன. கண்கள் கருப்புத் துணியால் மூடப்பட்டது.

பின் மயக்கம் அடைந்த அரிசிக்கொம்பனை நான்கு கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி தேக்கடி பெரியார் புலிகள் காப்பக அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மூணாறு டிஎஃப்ஓ ரமேஷ் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.