இந்தியா

டெல்லி பத்திரிகையாளர் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

webteam

உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்துக்கு எதிரான வீடியோ காட்சியை பதிவிட்டதற்காக டெல்லியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரின் மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறினார். இந்த வீடியோ காட்சிகளை டெல்லியை சேர்ந்த செய்தியாளர் பிரஷாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் டெல்லி மேற்கு வினோத் நகரில் உள்ள கனோஜியாவின் வீட்டுக்குச் சென்ற உத்தரபிரதேச போலீசார், அவரை கைது செய்து லக்னோ அழைத்துச் சென்றனர்.

அந்தப் பெண் பேசும் வீடியோவை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பியதை அடுத்து, அந்த சேனலின் தலைமையாசிரியர், செய்தி ஆசிரியர் ஆகியோரையும் உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிய பெண்ணும் கைது செய்யப்பட்டார். 

(பிரஷாந்த் கனோஜியா)

இந்நிலையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜின் மனைவி, கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.