மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதனால், இம்மாநிலங்களுடன் ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஹரியானா மாநிலத்திற்கு அக்டோபர் 1ஆம் தேதியும் ஜம்மு - காஷ்மீருக்கு மூன்று கட்டங்களாகவும் (செப். 18, 25 மற்றும் அக்.1) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
என்றாலும் இதுகுறித்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம், ”சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக தேர்தல் நடைபெற உள்ளதாலும், அங்கு பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய சூழல் உள்ளதாலும் மகாராஷ்டிராவில் அதேநேரத்தில் கவனம் செலுத்த முடியாது. கடந்த முறை நிலைமை வேறு. அப்போது காஷ்மீரில் தேர்தல் நடைபெறவில்லை. ஆனால் இப்போது காஷ்மீருக்கு அதிக பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள். அது மட்டுமின்றி தற்போது மகாராஷ்டிராவில் கனமழை காலமாக உள்ளது. தவிர விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி ஆகிய விழாக்களும் வர உள்ளன. எனவேதான் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் தாமதமாகிறது” என விளக்கமளித்திருந்தார்.
ஆனால், இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதுகுறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா அணியைச் சேர்ந்த ஆதித்ய தாக்கரே, ”தேர்தல் ஆணையம் மத்திய அரசின் பிரசாரத்தை வெடிக்கச் செய்கிறது. தேர்தல் தாமதத்துக்கு காஷ்மீரை காரணமாக கூறுகின்றனர்.
சமீப காலமாக ஜம்மு - காஷ்மீரில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள பயங்கரவாத தாக்குதல்கள் மத்திய பாஜக அரசின் தோல்வியை காட்டுவதாக தேர்தல் ஆணையமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது” எனக் கடுமையாக சாடியுள்ளார்.