ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாஜக வேலைபார்த்தது என்பது தொடர்பான தகவல் வெளிவந்துள்ளன.
மொத்தம் 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்காக பாஜக நடந்துகொண்ட விதம்தான் தெலங்கானா மற்றும் தேசிய அரசியலில் இப்போதைய ஹாட் டாபிக். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், "ஒரு மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க தலைவர்கள் அத்தனை பேரும் பிரச்சாரம் செய்வது ஏன்?'' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையேதான் அசாதுதீன் ஒவைசியும், "இது மாநகராட்சித் தேர்தல்போல தெரியவில்லை. பிரதமர் மோடிக்கு பதிலாக புதிய பிரதமரைத் தேர்வு செய்ய நடக்கும் தேர்தல்போல் இருக்கிறது. இன்னும் பாஜகவுக்கு ட்ரம்ப் மட்டும்தான் பிரசாரத்துக்கு வரவில்லை" என்று விமர்சித்தார்.
அவர் சொல்லியதுபோல், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் பட்நாவிஸ், மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, தமிழகத்தின் வானதி சீனிவாசன் என பாஜக படையே ஹைதராபாத் தேர்தலுக்காக அங்கேயே மையம் கொண்டிருந்தனர். பிரதமர் மோடி மட்டும்தான் பாஜவுக்காக பிரச்சாரம் செய்யவில்லை.
இதைவிட, ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் பொறுப்பாளராக மோடி, அமித் ஷாவின் நம்பிக்கை பெற்ற புபேந்திர யாதவ் நியமிக்கப்பட்டார். மேலும் இந்தத் தேர்தலுக்காக தனி தேர்தல் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது பாஜக. இதைப் பார்க்கையில் ஒரு மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இணையாக ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு பாஜக ஏன் முக்கியவத்துவம் கொடுக்கிறது என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கக்கூடும். அதற்கு அரசியல் வல்லுநர்கள் தற்போது விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
பாஜகவின் பிளான் என்ன?!
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு பாஜக ஏன் முக்கியவத்துவம் கொடுப்பதற்கு முக்கிய காரணம், தெலங்கானாவில் அக்கட்சி சமீபகாலமாக பெற்று வரும் வெற்றியே. சமீபத்தில் தெலங்கானாவின் துபக்கா சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அனைவரும் சந்திரசேகர ராவ்வின் கட்சியே வெற்றிபெறும் என நினைத்திருந்த நிலையில், பாஜக வெற்றிக்கனியை பறித்தது. இந்த இடைத்தேர்தல் மட்டுமல்ல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 4 முக்கியத் தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக. இதில் ஒன்று சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிட்ட தொகுதியாகும்.
பாஜகவின் இந்த வளர்ச்சி சந்திரசேகர ராவுக்கு சற்று தலைவலியை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதனாலேயே கடந்த சில மாதங்களாக பாஜக, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார். பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் மீண்டும் ஒருங்கிணைக்க தொடங்கியுள்ள சந்திரசேகர ராவ், டிசம்பர் இறுதிக்குள் பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துவேன் என்று அதற்கு உரிய ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்யத் தொடங்கியுள்ளார். சந்திரசேகர ராவின் எதிர்ப்பு மற்றும் தெலங்கானா மக்களிடம் சமீபகாலமாக கிடைத்து வரும் ஆதரவு காரணமாக ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வரிந்துகட்டி பணியாற்றி இருக்கிறது பாஜக.
அசாதுதீன் ஒவைசியும் ஒரு காரணம்...
கடந்த சில ஆண்டுகளாக பல மாநிலங்களிலும் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்தி வரும் பாஜக, அதே பாணியை தெலங்கானாவிலும் அமல்படுத்த தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவும் ஹைதராபாத் தேர்தல் களத்தை பயன்படுத்தியுள்ளது. இதையெல்லாம் தாண்டி பாஜக இந்தத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அது அசாதுதீன் ஒவைசி.
ஹைதராபாத் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் ஒவைசி பெற்று வரும் வளர்ச்சியும், பாஜக அம்மாநிலத்தை கண்வைக்க ஒரு காரணம். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஹைதராபாத்தில் ஒவைசியின் பலம் அதிகம். கடந்த மாநகராட்சித் தேர்தலில் அவரின் ஏ.ஐ.எம்.ஐ.எம் 44 இடங்களைப் பெற்றிருந்தது.
இதனால் அவரை தெலங்கானாவில் பலம் இழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்தத் தேர்தலை பயன்படுத்தியது பாஜக. இதை பாஜக பிரச்சார பேச்சுக்களில் இருந்தே காணலாம். பிரசாரத்தில் பாஜக மத அரசியலை முன்னிறுத்தியதோடு நில்லாமல், ஓவைசியை நேரடியாகவே விமர்சித்தார்கள். பாஜகவின் 'இளைஞர் முகம்' என அறியப்படுகிற தேஜஸ்வி சூர்யா, "ஒவைசிக்கு வாக்களிப்பது முகமது அலி ஜின்னாவிற்கு அளிக்கப்பட்ட வாக்கு. அவரை இங்கு தோற்கடிப்பது முக்கியம்" என்று குறிவைத்து பேசினார்.
இதேபோல் ஹைதராபாத் வந்த அமித் ஷா, "பாஜகவுக்கு வாய்ப்பளியுங்கள். ஹைதராபாத்தை நிஜாம் நவாப் கலாசாரத்திலிருந்து விடுவித்து காட்டுகிறோம்" என்றார். தெலுங்கானா பாஜக தலைவர் சஞ்சய், "பாகிஸ்தான், ரோஹிங்கியா மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் சட்டவிரோதமாக ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர். நகராட்சி தேர்தலில் பாஜக மேயர் பதவியில் வெற்றி பெற்றால், `சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' மூலம், ரோஹிங்கியாக்கள் மற்றும் பாகிஸ்தானியர்களை விரட்டப்படுவார்கள்" என்றும் பேசினார். இவர்கள் மட்டுமல்ல, யோகி ஆதித்யநாத், பட்நாவிஸ் என ஹைதராபாத் வந்த அனைவரும் ஓவைசியை குறித்து ஜின்னா, ரோஹிங்கியாக்கள், பாகிஸ்தானியர் என்று விமர்சித்தார்கள். இன்னும் சொல்லப்போனால் சந்திரசேகர ராவைவிட அவர்கள் ஓவைசியே அதிகம் விமர்சித்தனர்.
நடந்து முடிந்த பீகார் தேர்தலில், ஓவைசியின் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றியது. இதேபோல் மகாராஷ்ட்ராவிலும் ஓவைசி கட்சி பாஜகவுக்கு எதிராக வேலை பார்த்தது. அடுத்து மேற்குவங்கத்திலும் களம் காண இருப்பதாக அறிவித்திருக்கிறார் ஓவைசி. இப்படி ஓவைசி பலம்பெற்று வருவதை தடுக்க தான் மதத்தை முன்னிறுத்தி பாஜக அவருக்கு எதிராக தேர்தலில் இறங்கியுள்ளது. ஆனால், ஹைதராபாத்தில் யாருக்கு மவுசு அதிகம் என்பதை மக்களே தீர்மானிக்க இருக்கின்றனர். மக்களின் முடிவு இன்னும் 3 நாட்களில் தெரிந்துவிடும்.