பிபிஎல் நிறுவனர் கோபாலன் நம்பியார் pt web
இந்தியா

BPL தொலைக்காட்சி ஞாபகம் இருக்கிறதா? நிறுவனர் T.P. கோபாலன் நம்பியார் போற்றப்படக் காரணம் என்ன?

BPL எனும் புகழ் பெற்ற நிறுவனத்தை உருவாக்கிய தொழில்துறை வித்தகர் T.P. கோபாலன் நம்பியார் மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவர் தம் சேவைக்கு புகழாரமும் சூட்டியுள்ளனர். T.P.G என போற்றப்படக் காரணம் என்ன? அறியலாம்.

PT WEB

T.P.கோபாலன் நம்பியார்

சிறந்ததில் நம்பிக்கை வையுங்கள்- அதாவது BELIEVE IN THE BEST; மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த BPL நிறுவனம் தனது விளம்பரங்களில் பயன்படுத்தும் சொற்றொடர் இது.

80 மற்றும் 90-களில் இந்திய நடுத்தரக் குடும்பங்களின் வீடுகளில் BPL என்பது மிகவும் புகழ் பெற்ற ஒன்று. மிகச் சாதாரணமாக கேரளாவில் தொடங்கப்பட்ட ஒரு சிறு நிறுவனம், தொழில்நுட்ப உலகில் சிறந்து விளங்கிய ஜப்பான் நாட்டினரும் புகழ்ந்து போற்றும் வகையில் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்ததற்கு டிபிஜி என செல்லமாக அழைக்கப்பட்ட T.P.கோபாலன் நம்பியார் என்ற ஒற்றை மனிதனின் தன்னம்பிக்கையே காரணம்.

BRITISH PHYSICAL LABORATORIES - ராணுவத்தினருக்கான பேனல் மீட்டர்களை தயாரித்துத் தரும் நிறுவனமாக பாலக்காட்டை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் பணியாற்றிய அனுபவத்தினை மூலதனமாகக் கொண்டு TPG-யால் உருவாக்கப்பட்ட நிறுவனம், பின்னர் தயாரிப்பிற்குத் தேவையான வசதிகளைக் கருத்தில் வைத்து பெங்களூருவை தலைமையிடமாக் கொண்டது.

அதன் பின்னர் தொடர்ந்து வளர்ச்சி கண்டது. மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் இருந்து வீட்டு உபயோக மின்னணுப் பொருள்கள் தயாரிப்பிற்கு இந்நிறுவனம் வளர்ச்சி பெற வித்திட்டது, 1982-ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி.

கொடிகட்டிப் பறந்த BPL

தொலைக்காட்சியில் இப்போட்டிகளை நேரலை செய்யும்போது மக்களிடம் கிடைத்த வரவேற்பு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பில் டிபிஜியை இறங்கச் செய்தது. அதன் பின்னர் அசுர வளர்ச்சி கண்டது நிறுவனம்.

தொலைக்காட்சி மட்டுமின்றி, ஒலிநாடாப் பதிவுக் கருவி எனப்படும் டேப் ரிக்கார்டர்ஸ், ஏசி, மைக்ரோவேவ் அவன்(microwave oven) என பலதரப்பட்ட மின்னணுப் பொருள்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்தது. அதற்கு தொழில்நுட்ப விவரங்களை தந்து துணை நின்றது ஜப்பானைச் சேர்ந்த சேன்யோ நிறுவனம். இரண்டும் இணைந்து பிபிஎல் சேன்யோ என்ற பெயரிலேயே பொருள்களை தயாரித்து வழங்கின.

காலங்கள் உருண்டோட பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாக உலகின் அனைத்துச் சந்தைகளிலும் ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு போட்டியாக களம் கண்டன எல்ஜி, சாம்சங் போன்ற கொரிய நிறுவனங்கள்.

ஜப்பானிய தொழில்நுட்பத்தை வார்த்தெடுத்தது போன்ற தொழில்நுட்பத் திறன் கொண்ட பொருள்களை குறைந்த விலையில் வழங்கிய கொரிய நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க இயலாத நிலை, சேன்யோவுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது போன்றவற்றால் பிபிஎல் நிறுவனம் தனித்து மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் முடிவிற்கு வந்தது. பின்னர் அதிலும் பெரும்பாலான பங்குளை விற்கும் சூழல் ஏற்பட்டது.

இருப்பினும் இந்திய நடுத்தரக் குடும்பங்களின் கனவுகளை நனவாக்க முனைந்த டிபிஜி எனும் மூன்றெழுத்துகளால் அறியப்பட்ட T.P. கோபாலன் நம்பியார், இந்தியாவின் பெயரை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த டாடா, பிர்லா போன்ற தொழில்துறை வித்தகர்களின் வரிசையில் போற்றப்பட வேண்டியவரே.