அம்பேத்கர் - நேரு முகநூல்
இந்தியா

நேரு அமைத்த அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் ராஜினாமா செய்தது ஏன்? வரலாறு சொல்வதென்ன?

காங்கிரஸ் கட்சியால்தான் நேருவின் முதல் அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் ராஜினாமா செய்தததாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நேற்று குற்றம்சாட்டினார். அம்பேத்கர் வெளியேற காரணம் என்ன? வரலாறு என்ன சொல்கிறது? பார்க்கலாம்....

PT WEB

செய்தியாளர்: ஜி.எஸ். பாலமுருகன்

“சுதந்திரம் இந்தியாவிற்கு வருகிறது, காங்கிரசுக்கு அல்ல...” என்று ஜவஹர்லால் நேருவிடம் மகாத்மா காந்தி கூறினார். அந்த வார்த்தைகளால் வழிநடத்தப்பட்ட நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையை அமைத்தார். 1947 ஆகஸ்ட் 15இல் அமைந்த அமைச்சரவையில் நேரு, சர்தார் வல்லபாய் படேல் தவிர்த்து 12 பேர் இடம் பெற்றனர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சி ஆகிய மதப் பிரிவுகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன.

காங்கிரஸ் அல்லாத உறுப்பினர்களான, இந்து மகாசபையின் தலைவராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியும், பல ஆண்டுகளாக காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்த பி.ஆர். அம்பேத்கரும் இருந்தனர். ஆனால்,1952இல் முதல் அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவதற்குள் ஆறு பேர் ராஜினாமா செய்தனர். இதில் சட்ட அமைச்சர் அம்பேத்கரும் ஒருவர். இது 1951இல் இது நிகழ்ந்தது.

அம்பேத்கர் நீண்ட காலமாக காங்கிரஸையும் காந்தியையும் கடுமையாக விமர்சித்தவர். நேருவும் அம்பேத்கரும் சித்தாந்தத்தின் அடிப்படையில் அதிகம் வேறுபடவில்லை. ஆனால், பல்வேறு பிரச்னைகளில் அரசாங்கத்துடன் அதிருப்தி அடைந்தார் அம்பேத்கர். குறிப்பாக பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டவர் நலனுக்கு எதிரான மன நிலையில் நேரு இருந்தார் என அம்பேத்கர் கருதினார்.

இந்த பின்னணியில் இந்து மதத்தினருக்கான மசோதாவை சட்ட அமைச்சர் என்ற முறையில் அம்பேத்கர் தயாரித்தார். ஆனால் இம்மசோதாவுக்கு காங்கிரஸூக்குள் இருந்து எதிர்ப்பு எழுந்தது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற இந்து அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளால் நேரு மென்மையான போக்கிற்கு மாறினார்.

அம்பேத்கர் இந்து மதத்தினருக்கான மசோதாவை அரசியல் நிர்ணய சபையில் முன்மொழிந்தார். ஆனால் அது பல திருத்தங்கள் மற்றும் ஆட்சேபனைகளை எதிர்கொண்டு முடங்கியது. நான்கு ஷரத்துகளை விவாதிக்கவும் நிறைவேற்றவும் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது. அப்போது அரசியல் நிர்ணய சபையின் பதவிக்காலம் முடிவடைந்து, நாடு தனது முதல் பொதுத் தேர்தலை எதிர்நோக்கியது. இதனால் மசோதா காலாவதியானது. இதனால் அம்பேத்கர் விரக்தியும் தோல்வியும் கோபமும் அடைந்தார்.

அக்டோபர் 11, 1951 அன்று அம்பேத்கர் 4,000 வார்த்தைகள் கொண்ட ராஜினாமா கடிதத்தை எழுதி கொடுத்துவிட்டு அமைச்சரவையில் இருந்து வெளியேறினார். அந்த கடிதத்தில் தனக்கு இருந்த பிரச்னைகளை பட்டியலிட்டார். இந்து மதத்தினருக்கான மசோதாவை நேரு முழுமையாக ஆதரிக்கவில்லை என்று அம்பேத்கர் குற்றம்சாட்டினார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், பொருளாதாரம் குறித்த முக்கியமான விவாதங்களில் இருந்து தன்னை நேரு ஒதுக்கி வைத்ததாகவும் அம்பேத்கர் குற்றம்சாட்டினார்.