இந்தியா

"ராமரின் இந்தியாவில் பெட்ரோல் விலை ஏன் அதிகம்?" - மத்திய அமைச்சர் விளக்கம்

"ராமரின் இந்தியாவில் பெட்ரோல் விலை ஏன் அதிகம்?" - மத்திய அமைச்சர் விளக்கம்

jagadeesh

சீதாவின் நேபாளிலும், ராவணனின் இலங்கையிலும் பெட்ரோல் விலை குறைவாக இருக்கும்போது ராமரின் இந்தியாவில் மட்டும் ஏன் அதிகமாக இருக்கிறது என்று மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சி எம்பி விஷம்பர் பிரசாத் நிஷத் கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை தினசரி நிர்ணயம் என்ற நடைமுறைக்கு கொண்டு வந்தது அரசு. அதன் பின்னர் ஏறுமுகமாகவே உள்ளது எரிபொருளின் விலை. கடந்த 27ம் தேதிக்கு பிறகு விலை மாற்றம் இல்லாமல் இருந்தது. பின்னர் பிப்ரவரி 4,5ம் தேதிகளின் விலை ஏற்றம் இருந்தது. அதன்பின்னர் 6 மற்றும் 7,8ம் தேதிகளில் விலை மாற்றம் இல்லை.

இந்நிலையில் நேற்று விலை ஏற்றம் கண்டது பெட்ரோல், டீசல் விலை. இந்நிலையில் இன்றும் விலை ஏறுமுகத்தில் உள்ளது. பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 89.96ஆகவும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 82.90ஆகவும் விற்பனையாகிறது. கிட்டத்தட்ட ரூ.90ஐ நெருங்கிவிட்டது.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி விஷம்பர் பிரசாத் நிஷத் "சீதாவின் நேபாளிலும், ராவணனின் இலங்கையிலும் பெட்ரோல் விலை குறைவாக இருக்கும்போது ராமரின் இந்தியாவில் மட்டும் ஏன் அதிகமாக இருக்கிறது" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

அதில் "நம்முடைய பொருளாதாரத்தை பெரிய நாடுகளிடம் ஒப்பிட்டு பேச முடியுமா அல்லது சிறிய பொருளாரம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிட வேண்டுமா. பெரிய நாடுகளில் பெட்ரோல் தேவை அதிகம் என்பதால் விலையும் அதிகமாக இருக்கிறது. உதாரணத்துக்கு கெரோசினின் விலை நேபாளிலும், வங்கதேசத்திலும் லிட்டர் ரூ.57 முதல் 59 வரை விற்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கெரோசினின் விலை ரூ.32தான்" என்றார் தர்மேந்திர பிரதான்.