பள்ளிக்கூடம் மாடல் freepik
இந்தியா

"உங்கள் குடும்பங்கள் ஏன் பாகிஸ்தானுக்குப் போகவில்லை” - மாணவர்களிடம் கேள்வி எழுப்பிய டெல்லி ஆசிரியை!

”நாடு பிரிக்கப்பட்டபோது உங்கள் குடும்பங்கள் ஏன் பாகிஸ்தானுக்குப் போகவில்லை” என இஸ்லாமிய மாணவர்களிடம் டெல்லி ஆசிரியை ஒருவர் கேள்வி எழுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

சமீபகாலமாக நாடு முழுவதும் பள்ளிகளில் மதரீதியாகவும், சாதிரீதியாகவும் பிரச்னைகள் எழுந்து வருகின்றன. இதற்கு சமீபத்திய சில உதாரணங்கள் அடக்கம். இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி காந்தி நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியை ஒருவர் மதரீதியாகக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்தப் பள்ளிக்கூட ஆசிரியை, 9ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவர்களிடம், ”நாடு பிரிக்கப்பட்டபோது உங்கள் குடும்பங்கள் ஏன் பாகிஸ்தானுக்குப் போகவில்லை. நீங்கள், ஏன் இந்தியாவில் தங்கியிருந்தீர்கள்? இந்தியாவின் சுதந்திரத்தில் உங்கள் பங்களிப்பு இல்லை"எனச் சொன்னதுடன் மதரீதியாகவும் கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக 4 மாணவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுபோன்ற கருத்துக்கள் பள்ளியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர் சிலர், ”இதுபோன்று பேசும் ஆசிரியர் தண்டிக்கப்படாமல் போனால், மற்றவர்களும் தைரியம் அடைவார்கள். மாணவர்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கும் ஆசிரியரைப் பள்ளியிலிருந்து நீக்க வேண்டும். அவர் எந்தப் பள்ளியிலும் பாடம் நடத்தக் கூடாது” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக டெல்லி எம்.எல்.ஏவும் ஆம்ஆத்மி கட்சிதலைவருமான அனில் குமார் பாஜ்பாய், "இது முற்றிலும் தவறானது. குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்குவதே ஆசிரியரின் பொறுப்பு. எந்த மதம் அல்லது புனித இடங்களுக்கு எதிராக ஆசிரியர் தரக்குறைவான கருத்துக்களை வெளியிடக்கூடாது. அத்தகையவர்களை கைது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

up school teacher

ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மாணவரை, பிற மாணவர்கள் அறைந்த சம்பவமும், காஷ்மீரில் பள்ளியொன்றில் ’ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்தை எழுதிய இந்து மாணவர், இஸ்லாம் மத ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.