இந்திய பொருட்களை விட சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் விலை குறைவாக இருக்கக் காரணம் அந்நாட்டில் மானியங்கள் அதிக அளவில் தரப்படுவதே என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்திபார் சௌத்ரி இவ்வாறு பதிலளித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பதிலில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விட சீன உற்பத்தி பொருட்கள் விலை குறைவாக இருக்கக் காரணம் மானியமும் மற்றும் விலை நிர்ணய வழிமுறைகளுமே என்று அவர் தெரிவித்தார்.
பல்வேறு காரணிகளைச் சார்ந்தே சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நிலைத்த தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவை இருக்கும் என்றும் அவர் கூறினார். சரியான நேரத்தில் கடன் கிடைப்பது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தன்னை வளர்த்துக் கொள்வது, உள்கட்டமைப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் பொருட்களின் தரம் உள்ளிட்டவைகளே அந்த காரணிகள் என்றும் அமைச்சர் பட்டியலிட்டுள்ளார்.