கர்நாடகாவில் உள்ள ஏராளமான பள்ளி குழந்தைகள் சத்துணவை சாப்பிடுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பிரிவுகளில் ஒன்றாக அக்ஷயா பாத்ரா ஃபவுண்டேஷன் மூலம் இந்த மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள 2,814 பள்ளிகளில் படிக்கும் 4.43 லட்சம் மாணவர்களுக்கு இந்த மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த மதிய உணவை புறக்கணிக்கும் ஏராளமான பள்ளிக்குழந்தைகள், தங்கள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து சாப்பிடுகின்றனர்.
அத்துடன் வீடு அருகில் இருக்கும் குழந்தைகள் நேரடியாக வீட்டிற்கு சென்று உணவை சாப்பிட்டு வருகின்றனர். அத்துடன் தங்களது நண்பர்களுக்கும் அவர்கள் உணவு கொண்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுவதில்லை என்பது தான். தமிழகத்தில் மதிய உணவு எனப்படும் சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. அத்துடன் பருப்பு சாம்பார், பயிறு வகையில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் முட்டை வழங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஒரு டம்ளர் பால் வழங்கப்படுகிறது.
இதனால் முட்டையை விரும்பி சாப்பிடும் மாணவர்கள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து சாப்பிடுகின்றனர். அத்துடன் மதிய உணவில் வழங்கப்படும் சாப்பாடு தரக்குறைவாகவும், ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதால் அது அவர்களுக்கு பிடிப்பதில்லை. மேலும், சாம்பாரில் பயன்படுத்தப்படும் வெங்காயம் மற்றும் பூண்டும் தரமற்ற முறையில் இருப்பதால் பள்ளிக்குழந்தைகளுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை என மாணவர்களும், பெற்றோர்களும் கூறுகின்றனர்.