இந்தியா

தேடப்படும் குற்றாவாளிகள் பலரும் நேபாளத்தை தேர்ந்தெடுப்பதன் பின்புலம் என்ன? - ஒரு பார்வை

தேடப்படும் குற்றாவாளிகள் பலரும் நேபாளத்தை தேர்ந்தெடுப்பதன் பின்புலம் என்ன? - ஒரு பார்வை

இந்தியாவில் ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பிக்க நினைப்பவர்கள் உடனடியாக செல்லக் கூடிய நாடாக நேபாளம் இருக்கிறது. என்ன காரணம்? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

ஒரு நாட்டில் தவறு செய்துவிட்டு, பிற நாட்டிற்கு தப்பி செல்வது என்பது உலகின் எல்லா நாடுகளிலும் இருக்கக்கூடிய பிரச்னைதான்.
இந்தியாவிலும் விஜய் மல்லையா, நீரவ் மோடி என இந்தப் பட்டியல் மிக நீண்டது. வங்கி மோசடி, நிதி மோசடி செய்பவர்கள் மட்டுமல்லாமல், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குபவர்கள் கூட வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வார்கள். என்ன வித்தியாசம், அவரவர் வசதிக்கும் பின்புலத்திற்கும் ஏற்ப ஐரோப்பிய நாடுகளுக்கும் அண்டை நாடுகளுக்கும் தப்பிச்செல்வர்.

இதில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் முதல் நாடு, நேபாளம். காரணம், இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளைவிட நேபாளத்திற்கு செல்வதென்பது மிகவும் சுலபமான விஷயம். முறையான ஆவணங்கள் இருந்தாலும்கூட பாகிஸ்தான் செல்வது என்பது அசாத்தியமானது. இலங்கைக்கு தப்பலாம் என்றால் கடல் வழியில் செல்வதும், அங்கிருந்து வேறு நாட்டிற்கும் செல்வதும் கடினம்.

திபத்திற்கு செல்வது என்றால், சாலை வழியில் பயணிப்பது என்பது சற்று சிரமமானது. மீதம் இருக்கக்கூடியது நேபாளம்தான். நேபாளத்திற்கு சாலை வழியாக மிகச் சுலபமாக சென்றுவிட முடியும்.

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஆறு முக்கிய வழிகள் இருக்கின்றன. அதிலும் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் வழியாக செல்வது என்பது மிகவும் சுலபம். சில நூறு ரூபாய்களை கொடுத்தால் கோரக்பூரில் இருந்து காரில் கூட நேபாள எல்லைக்கு சென்று விட முடியும். நேபாளத்திற்கு இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா கிடையாது என்பது நம்மில் பெரும்பாலானவர்கள் அறிந்ததே. ஆனால் பாஸ்போர்ட் கூட சரியாக சோதனையிட மாட்டார்கள் என்பது பலரும் அறியாதது.

இதற்குக் காரணம், இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் போக்குவரத்து என்பது ஒரு மாநிலம் விட்டு மற்ற மாநிலம் செல்வது போலத்தான் இருக்கும். காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட பொருட்கள் தொடங்கி சிமெண்ட், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவை வரை நடைபெறும் வர்த்தகம் என்பது கட்டுப்படுத்த முடியாதது.

இவையும் தவிர இரு நாடுகளுக்கிடையே ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள கூடியவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். புனித தலங்களுக்கு செல்வதற்காக ஆன்மிக உடைகளில் செல்லும் பக்தர்கள் யாரையும் அவ்வளவு சுலபமாக சோதனை செய்யமாட்டார்கள் என்பதால் குற்றவாளி ஆசாமிகளும் சாமி வேடம் போட்டுக்கொண்டு தப்பிச் செல்வார்கள்.

அதேபோல இந்தியாவில் இருந்து வங்கதேசம் செல்வதைவிட நேபாளம் வழியாக வங்கதேசம் செல்வதென்பது மிகவும் சுலபம். எல்லாம் லஞ்சத்தின் சாத்தியம்தான்.

நேபாளத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க இமயமலையையும் அதனால் வரக்கூடிய சுற்றுலா பயணிகளையும் நம்பி இருக்கக்கூடிய ஒரு நாடு. எனவே வெளியிலிருந்து வரக்கூடியவர்களை அந்த நாட்டு காவல்துறையினர் பெரும்பாலும் சோதனைகள் செய்வது என்பது குறைவு. எனவே, நாள் கணக்கில் தங்கி இருந்தாலும் அவ்வளவு எளிதில் யாருக்கும் சந்தேகம் வந்துவடாது என்பதனால் குற்றவாளிகள் தஞ்சம் புக கூடிய இடமாக நேபாளம் இருந்து வருகிறது. செலவும் மிகக்குறைவாகத்தான் ஆகிறது.

மேலும், நேபாளத்திலிருந்து மற்ற நாடுகளுக்கு குறிப்பாக 'அரைவ் ஆன் விசா' மூலம் செல்லக்கூடிய நாடுகளுக்கு சுலபமாக தப்பித்துவிட முடியும். இதனால்தான் பெரும்பாலான இந்தியர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல நேபாளத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். நித்தியானந்தா கூட நேபாளம் வழியாகத்தான் இந்தியாவில் இருந்து தப்பியிருந்தார்.

தற்போது பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கியிருக்கும் சிவசங்கர் பாபா கூட நேபாளம் வழியாக தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா நேபாளம் இடையே எல்லைப் பிரச்னையில் நேபால் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால், எல்லை தாண்ட முயன்ற இந்தியர் ஒருவர் சுடப்பட்ட விவகாரத்திற்கு பிறகு இரண்டு நாடுகளும் எல்லைகளை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதால் தற்பொழுது நிலைமை கொஞ்சம் கட்டுப்பாடுடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பிக்க சுலபமாக கருதும் நாடாகத்தான் தொடர்ந்து நேபாளம் இருந்து வருகிறது.

- நிரஞ்சன் குமார்