இந்தியா

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?

ஜா. ஜாக்சன் சிங்

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருக்கும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா... யாருக்கு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சாதகமாக இருக்கும் என்பது குறித்து சற்று விரிவாக இங்கு காண்போம்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழலில், சிவசேனா எம்எல்ஏக்கள் 39 பேர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி திரண்டுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு சிவசேனாவுக்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

தற்போதைய சூழலில், ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அது யாருக்கு சாதகமாக அமையும்? மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 288. இதில் சிவசேனா எம்எல்ஏ ஒருவர் அண்மையில் மரணமடைந்தார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த இரண்டு எம்எம்ஏக்கள் வெவ்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கணக்கின்படி பார்த்தால், சட்டப்பேரவயைில் 285 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அங்கு ஆட்சியமைக்க 143 உறுப்பினர்களின் ஆதரவை ஒரு கட்சி பெற்றிருக்க வேண்டும்.

சிவசேனாவுக்கு 55 எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரஸுக்கு 52 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 44 எம்எல்ஏக்களும் உள்ளனர். அதன்படி, மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு 151 உறுப்பினர்கள் இருக்கின்றனர். பாஜக கூட்டணிக்கு 106 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இப்போது 39 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக இருப்பதால் சிவசேனாவின் பலம் 16 ஆக குறைந்துவிட்டது. இதன் அடிப்படையில் பார்த்தால், மகா விகாஸ் அகாடி கூட்டணியின் பலம் 112 ஆக சரிந்திருக்கிறது. அதே சமயத்தில், பாஜக கூட்டணிக்கு 12 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால் அதன் பலம் 118-ஆக அதிகரித்திருக்கிறது.

இதுதவிர, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவும் கிடைத்தால் பாஜக கூட்டணிக்கு 157 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். பெரும்பான்மைக்கு 143 உறுப்பினர்கள் பலமே போதுமானது என்ற நிலையில், பாஜக கூட்டணிக்கு அதை விட அதிக உறுப்பினர்கள் இருப்பதால் எளிதில் பாஜகவால் மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்துவிட முடியும். இதன் காரணமாகவே, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.