மக்களவை சபாநாயகர் யார் புதிய தலைமுறை
இந்தியா

மக்களவையின் புதிய சபாநாயகர் யார்? செக் வைக்கும் எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள்.. சிக்கலில் பாஜக!

ஜெனிட்டா ரோஸ்லின்

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் முதன்முறையாக 18 ஆவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் இரு தினங்களில் புதிய மக்களவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நடைபெற்று முடிந்தன. இதனை தொடர்ந்து, மக்களவைக்கு புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் பணி நாளை நடைபெற உள்ளது.

மக்களவை சபாநாயகர்

சபாநாயகர் பதவிக்கான மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று முடியும் நிலையில் மக்களவையின் புதிய சபாநாயகர், துணை சபாநாயகரை ஒருமனதாக தேர்வுசெய்ய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முயற்சி செய்து வருகிறது. இச்சூழலில், அவர்களை தேர்வுசெய்வது பற்றி எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சி தலைவர்களோடு அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

பாஜகவை பொறுத்தவரை சபாநாயகர் பதவியானது பாஜகவிடம் இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதற்கட்டமாக பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

அதற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஒப்புக்கொண்டது. அதேசமயம், துணை சபாநாயகர் பதவி யாருக்கு செல்லும் என்பது குறித்த கேள்விகள் எழுந்தன.

ஒருபுறம் கூட்டணி கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வேண்டும் என்று கூறி வருகின்றனர். மறுபுறம் பிரதான எதிர்க்கட்சிகளும், தங்களுக்கு இப்பதவி வேண்டும் எனவும், அப்படி முன்னிறுத்தாவிட்டால் நாங்கள் எங்களின் வேட்பாளரை முன்னிறுத்துவோம் எனவும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

ஏற்கெனவே எட்டு முறை எம்.பி.,யாக தேர்வான கொடிக்குன்னில் சுரேஷை இடைக்கால சபாநாயகர் பதவிக்கு நியமிக்காமல், 7 முறை தொடர்ச்சியாக எம்.பி.யாக தேர்வான பர்த்ருஹரி மஹ்தாபை 18 ஆவது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக  நியமிக்கப்பட்தற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சூழலில், துணை சபாநாயகர் பதவிக்கும் தங்களின் ஒற்றுமையை நிரூபிக்கவேண்டும் என்பது I.N.D.I.A. கூட்டணியின் நோக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “NDA கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிப்பதாக ராஜ்நாத் சிங்கிடம் கூறினேன்; துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும் என்றும் கூறினேன். கோரிக்கை தொடர்பான முடிவை தெரிவிப்பதாக கார்கேவிடம் ராஜ்நாத் கூறினார்; ஆனால், இதுவரை பதில் வரவில்லை" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒருவேளை துணை சபாநாயகர் பதவி கிடைக்கவில்லை என்றால், எதிர்க்கட்சிகள் இணைந்து சபாநாயகர் பதவிக்கு தங்கள் வேட்பாளரை முன்னிறுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனில் கே.சுரேஷ் அதற்கு போட்டியிடலாம் என தகவல்.