இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அழகிகளுக்கான போட்டியும் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஏஐ மாடல் ஒருவரும் முதல் பத்து இடங்களில் இருக்கிறார் என்பதுதான் வியப்பான செய்தியாகும்.
இந்தியாவைச் சேர்ந்த சாரா சதாவரி (Zara Shatavari) என்ற ஏஐ மாடலும் சர்வதேச ஏஐ உலக அழகிப் போட்டியில் முன்னணியில் இருக்கிறார். ஃபேன்வியூ (FAN VUE) என்ற ஓர் அமைப்பு முதன்முறையாக சர்வதேச அளவில் இப்படி ஏஐ மாடலகளுக்கான அழகி போட்டியை நடத்தி வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் ஃபேன்வியூ இந்த போட்டியை நடத்தி வருகிறது. இரண்டு மனிதர்கள் மற்றும் இரண்டு ஏஐ நடுவர்கள்தான் முதல் 10 அழகிகளை தேர்வு செய்துள்ளனர். போட்டியில் முதலிடத்தை பிடிக்கும் மாடலுக்கு 20,000 டாலர் பரிசு வழங்கப்பட இருக்கிறது.
அந்த வகையில், பல்வேறு நாடுகளில் இருந்து 1,500 மாடல்கள் இதில் போட்டியிட்டனர். அழகு, தொழில்நுட்ப அறிவு மற்றும் சமூக ஊடகங்களில் அவர்களுக்கு உள்ள ஃபாலோவர்கள் ஆகிய மூன்றின் அடிப்படையிலும் முதல் 10 பேரை ஃபேன்வியூ அமைப்பு தேர்வு செய்துள்ளது. பார்ப்பதற்கு உண்மையான பெண்ணைப்போலவே இந்த ஏஐ மாடல் இருப்பதுதான் இத்தனை பேரின் கவனத்தை ஈர்க்க காரணம்.
இந்தியன் மொபைல் ஏட் ஏஜென்சி என்ற நிறுவனத்தின் துணை நிறுவனரான ராகுல் சவுத்ரி என்பவர், இந்த சாரா சதாவரி என்ற ஏஐ மாடலை உருவாக்கினார். அவர், தங்கள் நிறுவன விளம்பர நோக்கங்களுக்காக இந்தச் செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கினார். இந்த மாடலுக்காக, தனியாக ஓர் இணையதள பக்கத்தையும் அவர் தொடங்கினார். அதில் உடல்நலம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் ஃபேஷன் ஆகியவை குறித்து டிப்ஸ்களை வழங்கி வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரா சதாவரிக்கு 8,000 ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர்.
யோகா செய்வது, தீபாவளி கொண்டாடுவது, பாரம்பரிய முறையில் உடை அணிந்திருப்பது, ஃபேஷனுக்கு ஏற்ப அப்டேட் செய்வது என சாராவின் (zarashatavari) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனப் பல படங்களையும் அவர் அப்டேட் செய்து வருகிறார். இந்தியாவின் பிரதிநிதியாக சாரா ஏஐ மாடல் முதல் 10 இடங்களில் இடம்பிடித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ராகுல் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க; ஹிஜாப் அணிய தடை.. மீறினால் அபராதம்.. தஜிகிஸ்தான் அரசு அதிரடி!