உமர் அப்துல்லா pt web
இந்தியா

ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் அப்துல்லா யார்? அவர் கடந்து வந்த பாதை...

ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக தனது மகன் உமர் அப்துல்லா பதவியேற்பார் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Angeshwar G

ஜம்மு காஷ்மீர் தேர்தல்

90 தொகுதிகளை கொண்ட ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வென்றுள்ளது. இதன் கூட்டணியான காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில் 48 தொகுதிகளில் வென்றதன் மூலம் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அரியணை ஏறுகிறது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்

காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடுக் கட்சியின் வெற்றி உறுதிப்பட தெரிந்தும், ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக தனது மகன் உமர் அப்துல்லா பதவியேற்பார் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

யார் இந்த உமர் அப்துல்லா

உமர் அப்துல்லாவின் தாத்தாவான ஷேக் முகம்மது அப்துல்லா, ‘காஷ்மீரின் சிங்கம்’ என அழைக்கப்பட்டவர். ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனர். மேலும், ஷேக் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் முதல் தலைமுறை அரசியல் தலைவர் என்பதும் பலமுறை ஜம்மு காஷ்மீரின் முதல்வராக செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உமரின் தந்தையான ஃபரூக் அப்துல்லாவும் 1982 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தவர்.

உமர் அப்துல்லா 1970 ஆம் ஆண்டில் மார்ச் 10 ஆம் தேதி இங்கிலாந்து எசெக்ஸில் ரோச்போர்டில் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை ஸ்ரீநகரில் பர்ன் ஹால் பள்ளியில் படித்தவர். இளங்கலை வணிகவியலை மும்பை சைடம்ஹாம் கல்லூரியிலும், முதுகலையை ஸ்காட்லாந்தில் ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

இள வயது முதலமைச்சர்

1998 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியின் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 28. 1999 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அதே மக்களவைத் தொகுதியில் மீண்டும் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். அப்போது அமைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மத்திய அமைச்சரவையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டவர்.

2001 ஆம் ஆண்டு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார். வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்களில் மிக இளம் வயதுடையவராக அறியப்பட்டார். மாநில சட்டமன்ற தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்காக பதவியை ராஜினாமா செய்தார்.

மீண்டும் முதலமைச்சர்

தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். ஆனால், தலைவராக பொறுப்பேற்ற பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

பின் 2009 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் 11 ஆவது முதலமைச்சராக உமர் அப்துல்லா பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 38. அவர் முதல்வராக இருந்த காலக்கட்டம் கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளுக்காக அறியப்பட்டது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் அப்துல் ரஷீத்திடம் 2.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். இந்நிலையில் மீண்டும் ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் உமர் அப்துல்லா.