சம்பாய் சோரன் pt web
இந்தியா

‘கொல்ஹான் புலி’.. ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கும் சம்பாய் சோரன் - யார் இவர்?

ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கும் சம்பாய் சோரன் 'கொல்ஹான் புலி' என அழைக்கப்படுகிறார்.

Angeshwar G

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில், ஜார்க்ண்ட் முக்தி மோர்ச் கட்சி மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பனர்கள் கூட்டமும் நடைபெற்றது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச் கட்சியின் சட்டமன்றத்தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அவர் முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கான உரிமை கடிதத்தை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார் சம்பாய் சோரன்.

முதலில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் முதல்வராக பொறுப்பேர்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்பாய் சோரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹேமந்த் சோரனின் சகோதரர் மறைந்த துர்காவின் மனைவியான சீதா சோரன் கல்பனா சோரன் முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என தகவல் வெளியானது.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சீதா சோரன், “எம்.எல்.ஏவாக கூட இல்லாத, அரசியல் அனுபவம் இல்லாத கல்பனா சோரன் ஏன் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என கேட்க விரும்புகிறேன். அவரை முதல்வராக ஆக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கடுமையாக எதிர்ப்பேன். பல மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்களால் நல்ல ஆட்சியை வழங்க முடியும். அவர்கள் குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்க விரும்பினால் நான் தான் மூத்தவர். சுமார் 14 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

ஹேமந்த் சோரன், சம்பாய் சோரன்

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் 23 ஆண்டுகால தனி மாநில வரலாற்றில் நான்காவது முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்க உள்ளார். 68 வயதான சம்பாய் சோரன் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை சிமல் ஒரு விவசாயி. அவரது தாய் மாடோ இல்லத்தரசி. கொல்ஹான் பகுதியைச் சேர்ந்த இவர், +10ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர்.

சம்பாய் சோரன் செரைகேலா (Seraikela) தொகுதியில் 1991 ஆம் ஆண்டு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். அதன்பின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றியவர். 1995 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் 2000 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலை தவிர அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 7 முறை தேர்வு செய்யப்பட்டவர் சம்பாய் சோரன்.

2010 ஆம் ஆண்டு அர்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக அரசின் அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் 2013 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை, பழங்குடியின மற்றும் பட்டியலின அமைச்சராகவும் பதவி வகித்து வந்தவர் சம்பாய் சோரன்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவினை ஹேமந்த் சோரனின் தந்தை ஷுபு சோரன் தொடங்குகையில், அதன் ஆரம்ப கால நிறுவன உறுப்பினர்களில் சம்பாய் சோரனும் ஒருவர். ஷிபு சோரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர். ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதல்வராக சம்பய் சோரன் தேர்வு செய்யப்பட்டது, அம்மாநிலத்தில் பாஜகவை அழிக்கும் துருப்புச் சீட்டாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அவர் கொல்ஹான் பகுதியின் புலி என அழைக்கப்படுகிறார்.