இந்தியா

பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் திருப்பம் - சித்ரா ராமகிருஷ்ணா கூறிய 'இமயமலை யோகி' யார்?

பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் திருப்பம் - சித்ரா ராமகிருஷ்ணா கூறிய 'இமயமலை யோகி' யார்?

Sinekadhara

தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் அதன் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை தவறாக வழிநடத்திய இமயமலை யோகி யார் என நீதிமன்றத்தில் சிபிஐ கேள்வி எழுப்பியிருக்கிறது.

தேசிய பங்குச் சந்தையில் 2016ஆம் ஆண்டு வரை தலைமைப் பொறுப்பில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலையைச் சேர்ந்த யோகி ஒருவரின் ஆலோசனை கேட்டு முடிவுகளை எடுத்ததாகக் கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த சிபிஐ, தேசிய பங்குச்சந்தையின் குழும தலைமை அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணாவால் நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்ரமணியம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. பின்னர், ஆனந்த் சுப்ரமணியம் கைது செய்யப்பட்ட நிலையில், சித்ரா ராமகிருஷ்ணாவையும் கைதுசெய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆனந்த் சுப்ரமணியன் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தொடர்ந்த பிணை கோரும் வழக்கு விசாரணைக்கு வந்தது. பிணை வழங்கினால் ஆனந்த் சுப்ரமணியன் வெளிநாடு தப்பி விடுவார் என்பதால் சிபிஐ வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முறைகேடு வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதாகக் கூறிய அவர், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனை கூறியதில் இமயமலை யோகி யாருமில்லை என்றும், ஆனந்த் சுப்ரமணியம்தான் முழுஆலோசகராக செயல்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

தேசிய பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை ஆனந்த் சுப்ரமணியம் வலியுறுத்தலின்பேரிலேயே சித்ரா ராமகிருஷ்ணா எடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.