ரத்தன் டாடா, நோயல் டாடா எக்ஸ் தளம்
இந்தியா

Noel Tata| டாடா அறக்கட்டளையின் அடுத்த தலைவர் நியமனம்.. யார் இந்த நோயல் டாடா?

Prakash J

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, இன்று நம்மோடு இல்லை. உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் அவர் காலமானார். இந்த நிலையில், ரத்தன் டாடாவின் மரணத்தைத் தொடர்ந்து, டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா அறக்கட்டளை என்பது டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து கிளைகளையும் உள்ளடக்கியதாகும்.

யார் இந்த நோயல் டாடா?

நோவல் டாடா மற்றும் பிரெஞ்சு-சுவிஸ் கத்தோலிக்கரான சிமோன் என்.டாடா ஆகியோருக்கு டிசம்பர் 1957இல் பிறந்த நோயல் டாடா, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். அவர் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் (யுகே) பட்டம் பெற்றவர் மற்றும் INSEADஇல் சர்வதேச நிர்வாகத் திட்டம் (IEP) முடித்தவர். ஆலு மிஸ்ட்ரியை மணந்துகொண்ட நோயல் டாடாவுக்கு லியா, மாயா, நெவில் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்ப வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். லியா டாடா இந்திய ஹோட்டல் நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். மாயா டாடா டாடா கேபிட்டலுடனும், நெவில் டாடா ஸ்டார் பஜாரில் ட்ரெண்ட் தலைமைக் குழுவின் ஒரு பகுதியாக உள்ளார். இந்த புதிய நியமனத்திற்குமுன் நோயல் டாடா, அக்குழுமத்தின் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக இருந்தார். 2010 முதல் 2021 வரை அவரது தலைமையின்கீழ், அந்த நிறுவனம் 500 மில்லியன் டாலர் வருவாயிலிருந்து டாலர் 3 பில்லியன் வரை அளவுக்கான வளர்ச்சியைப் பெற்றது.

இதையும் படிக்க:வங்கதேசம் | பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம்.. காளி கோயிலில் திருட்டு.. போலீஸ் விசாரணை

டாடா ட்ரெண்ட், டாடா இன்டர்நேஷனல் லிமிடெட், வோல்டாஸ் மற்றும் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் தலைவராகவும் நோயல் டாடா உள்ளார். டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். அவர் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் ஆகியவற்றின் குழுவில் ஒரு அறங்காவலராகவும் பணியாற்றுகிறார். இது டாடா சன்ஸ் உரிமையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதன்மூலம், சர் ரத்தன் டாடா டிரஸ்டின் ஆறாவது தலைவராகவும், சர் டோராப்ஜி டாடா டிரஸ்டின் 11வது தலைவராகவும் நோயல் டாடா பதவியேற்றுள்ளார். முன்னதாக, டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு நோயல் டாடா முன்னிறுத்தப்பட்டார்.

ஆனால் நோயலின் மைத்துனரான சைரஸ் மிஸ்திரி அதைத் தட்டிப் பறித்தார். பின்னர் சர்ச்சையின் காரணமாக மிஸ்திரி அப்பதவியில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தலைவராக இருந்த, என்.சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவராக ஆனார்.

இதையும் படிக்க: PAK Vs ENG|ஒரே டெஸ்ட் போட்டி.. கதகளி ஆடிய இரு இங்கிலாந்து வீரர்கள்.. பல சாதனைகள் படைத்த ஹாரி புரூக்!